விருதுநகர் பஜார் காவல்நிலைய லிமிட்டில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் வசிக்கிறார் பானுமதி (வயது 52). இவருடைய கணவர் புகழேந்தி (வயது 57) யமஹா ஷோ ரூமில் வாட்ச்மேன் வேலை பார்க்கிறார். தங்களுடைய மகனுக்கும் மகளுக்கும் திருமணம் செய்துவைத்து பெற்றோர் கடமையை முடித்துவிட்ட நிலையில், மகனும் மகளும் தனித்தனி குடும்பமாக வாழ்கின்றனர்.
இந்நிலையில், புகழேந்தியும் பானுமதியும் தங்களது வீட்டில் சண்டையும் சச்சரவுமாக வாழ்ந்துள்ளனர். அதனால், கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுச் செல்வதும் திரும்புவதும் பானுமதியின் வழக்கமாக இருந்துள்ளது. அன்று நல்ல தண்ணீர் வந்துள்ளது. யார் நல்ல தண்ணீர் பிடிப்பது என்பதில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தகராறாகி, “நான் அம்மா வீட்டுக்குப் போகிறேன்.” என்று பானுமதி கூற, புகழேந்தியோ “நீ எங்கும் செல்லவேண்டாம். நானே வீட்டை விட்டுச் செல்கிறேன்.” என்று கட்டைப் பையில் துணிகளை எடுத்துக்கொண்டு போய்விட்டார். எங்கு தேடியும் புகழேந்தி கிடைக்காத நிலையில், விருதுநகர் பஜார் காவல்நிலையத்தில் கணவரைக் காணவில்லை என்று பானுமதி புகாரளித்துள்ளார்.
திருத்தங்கல் காவல்நிலைய லிமிட்டில் உள்ள சத்யா நகரில் பஞ்சவர்ணம் (வயது 42) வசிக்கிறார். கடந்த 18-ஆம் தேதி, இவருடைய கணவர் தர்மராஜ் (வயது 53) தனது நண்பர்களுடன் காசிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். 21-ஆம் தேதி காலை 10 மணியளவில் நக்ரி என்ற இடத்தில் ரயிலில் இருந்து இறங்கிய தர்மராஜ் காணாமல் போய்விட, அவருடன் சென்ற பாண்டி, பஞ்சவர்ணத்துக்கு தகவல் சொல்கிறார். இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தர்மராஜை அருகிலுள்ள வருரா காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையறிந்த பஞ்சவர்ணம், கணவர் தர்மராஜை அழைத்துவர கார் புக் செய்துள்ளார். அந்தக் காரில் வரும்போது, தன்னை யாரோ கடத்திச் செல்வதாக நினைத்த தர்மராஜ், தெலங்கானா மாநிலம், மியாபூரில் இறங்கி ஓடி, காணாமல் போய்விடுகிறார். அந்த காரின் டிரைவர், தர்மராஜ் காணாமல் போன மியாபூர் லொகேஷனை பஞ்சவர்ணத்துக்கு ஷேர் செய்திருக்கிறார். மியாபூரில் தொலைந்த கணவர் தர்மராஜை கண்டுபிடிக்கும்படி, திருத்தங்கல் காவல் நிலையத்தில் பஞ்சவர்ணம் புகார் செய்திருக்கிறார்.
மல்லி போலீஸ் லிமிட்டில் உள்ள கம்மாபட்டியில் வசிக்கிறார் பிரபாகரன் (வயது 23). இவருடைய அக்கா புவனேஸ்வரி (வயது 25) பட்டப் படிப்பு முடித்து வீட்டில் இருந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி இரவு, அம்மா, அப்பாவுடன் தூங்கிக்கொண்டிருந்த புவனேஸ்வரி, அதிகாலை 3 மணியளவில் காணாமல் போய்விட்டார். திருமணச் செலவுகளுக்காக வீட்டில் வைத்திருந்த ரூ.50000-ஐயும் எடுத்துச் சென்றுவிட்டார். தனது அக்கா புவனேஸ்வரியைக் கண்டுபிடித்துத் தரும்படி மல்லி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார் பிரபாகரன். காணாமல் போனவர்களால் மண்டை காய்ந்து பரிதவிப்பது சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மட்டுமல்ல, வழக்குப்பதிவு செய்த காவல்நிலையங்களும்தான்.