மோகனூர் அருகே, ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை மனைவியே அடித்துக் கொலை செய்துவிட்டு, சாலை விபத்தில் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள செல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் பெரியசாமி (37). கட்டட மேஸ்திரி. இவருடைய மனைவி பிரேமா (35). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆகஸ்ட் 23ம் தேதி அதிகாலை, பிரேமாவிற்கு திடீரென்று காது வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து பெரியசாமி, அவரை தனது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து மோகனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பொய்யேரிக்கரை சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெரியசாமி நிகழ்விடத்திலேயே பலியானதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து பிரேமா அளித்த புகாரின் பேரில் மோகனூர் காவல்நிலைய காவல்துறையினர், சாலை விபத்து வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சடலத்தைக் கூராய்வு செய்த பிறகு பிரேமா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து சடலத்தை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, வாகனம் மோதிய விபத்தில் பெரியசாமி இறந்துவிட்டதாக பிரேமா சொன்னாலும், அவருடன் ஒரே வாகனத்தில் சென்ற பிரேமாவுக்கு சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர் தப்பியது எப்படி என்பதில், காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. கணவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, பிரேமாவின் நடவடிக்கைகளும் சந்தேகிக்கும் வகையில் இருந்தது. சந்தேகத்தின் பேரில் பிரேமாவை அழைத்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார். காவல்துறையினர் தங்கள் பாணியில் விசாரித்தபோது தான் அவரிடம் இருந்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
கணவரை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டு தீர்த்துக் கட்டிவிட்டு, சாலை விபத்து மரணமாக சித்தரித்ததோடு, ஒட்டுமொத்த காவல்துறையினரையும் நம்ப வைத்து ஏமாற்றியது தெரிய வந்தது. காவல்துறையினர் பிரேமாவின் அலைப்பேசியை வாங்கி சோதனை செய்தனர். இதில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நந்திகேசவன் (35) என்பவருடன் பிரேமா தினமும் மணிக்கணக்கில் பேசி வந்தது தெரிய வந்தது. மோகனூரில் உள்ள ஒரு பேக்கரியில் பிரேமா வேலை செய்து வந்துள்ளார். அப்போது, தர்மபுரியைச் சேர்ந்த நந்திகேசவனும் அவருடன் வேலை செய்து வந்துள்ளார். இதில் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
இதையறிந்த பெரியசாமி தனது மனைவியையும், நந்திகேசவனையும் கண்டித்துள்ளார். மேலும், மனைவி வேலை செய்து வந்த பேக்கரி கடைக்கே சென்றும் சத்தம் போட்டுள்ளார். இதனால் பிரேமா, நந்திகேசவன் ஆகிய இருவரையும் பேக்கரி உரிமையாளர் வேலையை விட்டு நிறுத்திவிட்டார். அதன்பின் வேறு எங்கும் வேலைக்குச் செல்ல அனுமதிக்காததால், வீட்டிற்குள்ளேயே பிரேமா முடங்கிக் கிடந்தார். கணவரின் கண்காணிப்பு அதிகரித்ததால், பிரேமா தனது ஆண் நண்பரை சந்திக்க முடியாமல் தவித்து வந்தார். தனது கணவர் உயிருடன் இருக்கும் வரை நாம் சந்திக்க முடியாது. அவரை தீர்த்துக் கட்டினால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்று பிரேமா கூறியுள்ளார். இந்த திட்டத்துக்கு அவருடைய ஆண் நண்பர் நந்திகேசவனும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்தே, ஆகஸ்ட் 23ம் தேதி அதிகாலை பிரேமா தனக்கு காது வலி ஏற்பட்டதாக நாடகம் ஆடி, கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அவர்கள் ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டப்படி, பொய்யேரிக்கரை அருகே சென்றபோது நந்திகேசவன், பெரியசாமியின் வாகனத்தை தடுத்து நிறுத்தி, சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே பெரியசாமி இறந்துவிட்டார். இதுகுறித்து பிரேமா முதலில் தனது உறவினர்களிடம் விபத்தில் கணவர் இறந்து விட்டதாகக் கூறியுள்ளார். அவர்கள் சந்தேகம் கிளப்பாததால், காவல்துறையினரும் ஆரம்பத்தில் இதை சாலை விபத்தாகவே கருதினர்.
ஆனாலும், பிரேமாவின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வந்த காவல்துறையினர், பெரியசாமியின் இறப்பில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்ததோடு, பிரேமாவையும் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த நந்திகேசவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். தனது கணவரை மனைவியே ஆண் நண்பருடன் சேர்ந்து அடித்துக் கொன்றுவிட்டு, சாலை விபத்தில் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் மோகனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.