விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகே உள்ள பனையபுரத்தைச் சேர்ந்தவர் தேவநாதன். இவரது மனைவி 23 வயது அஸ்வினி. இவர் தனது குழந்தையுடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை கேட்கும் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார்.
அவர் அளித்த மனுவில், “கடந்த 2018 ஆம் ஆண்டு எனக்கும் கடலூர் மாவட்டம் கலசப்பாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். தற்போது எங்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கணவர் பாலாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டோம். அதன் பிறகு பெரிய தச்சூர் கிராமத்தை சேர்ந்த தேவநாதன் என்பவர் என்னை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துகொண்டால் என்னையும், முதல் குழந்தையையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்தார், அதனை நம்பி கடந்த 2021 ஆம் ஆண்டு கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டோம்.
இதனைத் தொடர்ந்து இருவரும் புதுச்சேரியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தோம். எங்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கணவர் தேவநாதன் வேலைக்கு செல்லாமல், குடும்பம் நடத்த வருமானம் இல்லாமல் இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து வேலைக்கு செல்லுமாறு நான் எனது கணவரை வற்புறுத்தி வந்தேன். இந்த நிலையில் தான் அவர் தனது செல்போனில் ஆண்களை கவரும் வகையில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி அதை செல்போனில் என்னை பேச வைத்து அதனை அவரது நண்பர்களுக்கும் மற்ற ஆண்களுக்கும் அனுப்பி அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று என்னிடம் கூறினார்.
ஆனால் நான் இதுபோன்று இழிவான செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டேன். அதற்கு நாங்கள் இருவரும் தனிமையில் இருந்தபோது எனக்கு தெரியாமல் வீடியோவாக பதிவுசெய்து வைத்திருப்பதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு களங்கப்படுத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார். தொடர்ந்து என்னையும், எனது குழந்தையையும் மிரட்டி சித்திரவதை செய்கிறார். இதுகுறித்து நான் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தேவநாதன் மீது புகார் அளித்தேன் அந்தப் புகாரின் பெயரில் போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது அவர் அடியாட்களை வைத்து என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இந்த நிலையில் தேவநாதனுடன் தனிமையில் இருந்ததன் காரணமாக தற்போது ஐந்து மாத கர்ப்பமாக உள்ளேன். இதனை அறிந்த தேவநாதன் என்னையும், எனது குழந்தையையும் தீர்த்து கட்டுவதற்கு திட்டமிட்டு வருகிறார். ஆகையால் தேவநாதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால் ஆதரவற்ற நிலையில் வாழ வழியின்றி தவிக்கும் என்னை நானே கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் காவல்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.