தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது ஏன் என அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 15) நடந்தது. அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியது; ”மத்திய அரசின் 15வது நிதிக்குழுவின் உத்தரவின்படியே தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே அந்த உத்தரவை செயல்படுத்தாததால் 7500 கோடி ரூபாய் மத்திய அரசுக்கே திரும்ப சென்றுவிட்டது. தற்போது, 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரும்பச் சென்று விடக்கூடாது என்பதற்காக சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
அதனால் 83 சதவீதம் பேருக்கு 25 முதல் 50 சதவீதம் வரை மட்டுமே வரி உயர்த்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. வணிக நோக்குடைய கட்டடங்கள், தொழிற்சாலைகளுக்கு 100 சதவீத வரி உயர்த்தப்பட்டு உள்ளது. 1.7 சதவீதம் பேருக்கு மட்டுமே சொத்து வரி 200 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட 15 மாநிலங்களில் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்ததைவிட குறைவாகவே தற்போது வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், அதைப்பற்றி வாய் திறக்காமல் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் சொத்து வரி உயர்வு குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களைத் திறம்பட எதிர்கொண்டு முதல்வர் மக்கள் நலனுக்காக திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். சேலம் பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க 98 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஒப்புதல் அளித்த பின்னர், சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும்.
தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, சென்னை, கோவை, மதுரையைத் தொடர்ந்து சேலத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். ராஜஜெயம் கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு மீது நம்பிக்கை உள்ளது”. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பார்த்திபன் எம்பி., ராஜேந்திரன் எம்எல்ஏ., மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.