தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கி, 29ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்ரல் 29) வெளியிடப்பட்டன.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகளை முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி வெளியிட்டார்.
இம்மாவட்டத்தில் 154 மையங்களில் 22221 மாணவர்கள், 22112 மாணவிகள் என மொத்தம் 44333 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 20904 பேர் அதாவது 94.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 21432 மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.92 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்த அளவில் சேலம் மாவட்டத்தில் 95.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் சேலம் மாவட்டத்தில் 95.08 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டில் 0.42 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் 254 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 22384 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 21021 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது அரசுப்பள்ளிகளில் படித்த 93.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் படித்த பள்ளியிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும், தேர்வர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் கைகுலுக்கியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கின்றன. இதற்கான விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சாதனை:
சேலம் மாவட்டத்தில் பார்வையற்றவர்கள் 19 பேர், காது கேளாத, வாய் பேச இயலாதவர்கள் 32 பேர், உடல் ஊனமுற்றோர்கள் 58 பேர் மற்றும் இதர வகையினர் 98 பேர் என மொத்தம் 207 பேர் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை எழுதினர்.
இவர்களில் பார்வையற்றோர்களில் 18 பேரும், காது கேளாத, வாய் பேச இயலாதவர்களில் 25 பேரும், உடல் ஊனமுற்றோர்களில் 55 பேரும், இதர வகையினர் 93 பேரும் என மொத்தம் 191 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.