பேரவையில் உறுப்பினர்களை விட சபாநாயகர்தான் அதிகமாக பேசுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''சட்டமன்றத்தில் பேச்சுரிமையே இல்லை. அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்த பிறகு பெரும்பான்மையாக 62 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் யாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி கொடுக்க வேண்டும். எங்கள் கட்சிக்குதான் கொடுக்க வேண்டும். ஓபிஎஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது. அதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது.
முகாந்திரம் இல்லாத நிலையில் ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் எம்எல்ஏக்கள் எல்லோரும் கையெழுத்து போட்டு பலமுறை கொடுத்தாச்சு. ஆனால் சட்டமன்றத்தில் பேச்சுரிமையே மறுக்கப்படுகின்ற சூழல்தான் ஏற்பட்டுள்ளது. நான் கூட சபாநாயகராக இருந்தேன் எல்லாருக்குமே பாரபட்சம் இல்லாமல் பேச வாய்ப்பு கொடுத்தேன். ஆனால் இன்று உறுப்பினர்களை விட சபாநாயகர் தான் அதிகம் பேசுகிறார். வாத்தியார்களை சபாநாயகர் பதவியில் உட்கார வைக்கக் கூடாது. வாத்தியார்கள் அதிகமாக லெக்சர் குடுப்பாங்க. அந்த மாதிரி சட்டசபையில் அதிகமாக அவர் தான் பேசுகிறார். உறுப்பினர்களை எந்த காலகட்டத்திலும் பேச விடுவதில்லை. மக்கள் பிரச்சனைகளுக்கு நியாயமாக குரல் கொடுக்கும்போது அதற்கு செவிசாய்க்க வேண்டும். செவி சாய்க்காமல் அதை திசை திருப்புகின்ற வேலையாக அமைச்சர்கள் பேசினால் தாராளமாக விடுவது. அதற்கு மேல் சபாநாயகர் பேசுவது. இதுவெல்லாம் எதிர்க்கட்சிகளின் உணர்வுகளை, ஜனநாயக கடமையை நசுக்குற செயலாகதான் இருக்கிறது'' என்றார்.