
திருவாரூர் அருகே உள்ள அரசு பள்ளி மாணவிகள் இரண்டுபேரை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வாலிபர்கள் போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியை சோ்ந்த இரண்டு மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் வழக்கம்போல் கடந்த 10ம் தேதி பள்ளிக்கு சென்ற இரு மாணவிகளும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் நேரம் கடந்ததே தவிர மாணவிகள் கிடைக்கவில்லை.
இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரனையில் குடவாசல் பகுதியை சோ்ந்த கௌதம், மயிலாடுதுறையை சோ்ந்த சுந்தரமூர்த்தி ஆகியோர், இரண்டு மாணவிகளையும் காதலிப்பதாக கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து நன்னிலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை மீட்டதோடு, உடனிருந்த மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அதில் மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களை அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாணவிகளை அழைத்து சென்ற கௌதம்(19), சுந்தரமூர்த்தி(19) மற்றும் இவர்களுக்கு உதவியாக மயிலாடுதுறையை சோ்ந்த மணிகண்டன்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட மாணவிகள் அரசு காப்பகத்திற்கு அனுப்பட்டனர்.