Skip to main content

கருப்புக்கொடிக்கு பிரதமர் அஞ்சுவது ஏன்? 56 இஞ்ச் என்னாயிற்று? கி.வீரமணி கேள்வி!

Published on 13/04/2018 | Edited on 13/04/2018
kalai


ஜனநாயகத்தில் கருப்புக்கொடி காட்டுவது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றே - அதை எதிர்கொள்ளாமல் ஒரு பிரமதர் வானில் பறப்பது சரியா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் - ஒத்துழைப்புக் கொடுத்துவரும் பொதுமக்களுக்கு நன்றி என திராவிடர் கழகத் தலைவர் கி.விரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துத் தோழமைக் கட்சிகளான ஒன்பது அமைப்பின் கூட்டத்தில் எடுத்த முடிவிற்கேற்ப, காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் ஆணையை, 6 வாரத்திற்குள் அமைக்காமல், (கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பை அது தடுக்கக்கூடும் என்ற அரசியல் நோக்கத்தோடு) காலதாமதம் செய்யும், மத்திய அரசின் போக்கை கண்டித்து தமிழ்நாடு கிளர்ந்தெழவேண்டும்; 12 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருவதாக உள்ள பிரதமர் மோடிக்குக் கருப்புக் கொடி காட்டியும், வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றியும், கருப்புடை அணிந்தும் நமது எதிர்ப்பை அறவழியில் காட்டுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடி

12.4.2018 அன்று பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். சிறிதுதூரம் கூட சாலை மார்க்கமாக செல்ல அஞ்சியே, ஹெலிகாப்டரில் பறந்தும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழாவிற்கு வரும்போது, பக்கத்தில் உள்ள ஐஐடியின் சுவரை இடித்து, அதில் புகுந்து மேடைக்குச் சென்றதும் எவ்வளவு பெரிய ஜனநாயக விரோதச் செயல் என்பதை உலகு கண்டு வெட்கித் தலைகுனிகிறது. காரணம், கருப்புக் கொடி, கருப்புடை, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றம், வீதிகளில் பா.ஜ.க., மற்றும் பிரதமருக்கு எதிரான முழக்கம் - இவைகளைத் தவிர்த்து டெல்லி திரும்பினார்.
 

ballon


நாட்டின் பிரதமர், அந்தப் பகுதிக்கு வரும்போது, அம்மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டு, ஆவன செய்வோம் என்று கூறுவதுதானே அரசியல் நாகரிகம், பண்பு; அல்லது குறைந்தபட்சம் அவர் நிகழ்த்திய உரைகளின்போதாவது, இப்பிரச்சினைபற்றி தனது கருத்துகளைக் கூறி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கை அளித்து, அவரைப்பற்றியும், அவரது ஆட்சியின்மீதும் தமிழ் மக்களின் நம்பகத்தன்மையை உருவாக்கியிருக்க வேண்டாமா?

வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழ்நாடு

வானில் பறந்தே சென்றுவிட்டார்! உலக நாடுகளுக்குப் பறந்து பழக்கப்பட்டவர், தமிழ் மண் பெரியார் மண் என்பதால், அவர் இதை ஒரு எதிரி பூமியாகவே பார்க்கின்ற கொடுமை உள்ளதே! எல்லா வகையிலும் மத்திய அரசால் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியை பல கோஷ்டிகளாக பிளவுபடுத்தி, அதில் குளிர்காயும் அரசியலை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

டெல்லிக்கு சர்வ அடிமையான தமிழக அரசு

டெல்லியின் சர்வ அடிமைகளாகத் தமிழ்நாட்டு அமைச்சர்கள், கைகட்டி, வாய்ப் பொத்தி சேவகம் செய்து, இருக்கிறவரை லாபம் என்ற கண்ணோட்டத்தோடு ஆளுநர் கூறுவதையே (துணைவேந்தர்கள் நியமனம்பற்றிய செய்தி) நகல் எடுத்துகூறி, தமிழகத்தில் ஆட்சி நடத்தாமல், காட்சி நடத்தும் அவலம் தொடருகின்றது.
 

modi


கண்டனத்தின் - கோபத்தின் வெளிப்பாடே கருப்புக்கொடி ஆவேசம்!

இந்த நிலைமீதான கண்டனம், கோபம்தான், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமாக, கருப்புச் சட்டை அணிதலாக, ஆவேசமாக எழுச்சி வடிவம் எனும் பெருவுரு (விஸ்வரூபம்) எடுத்தது! அனைத்துக் கட்சிகளும் கேட்டுக்கொண்டது என்பது ஒருபுறம் இருந்தாலும், அனைத்துத் தரப்பினரின் தன்னெழுச்சியாக - ஒரு ஆவேசப் புயலாக, ஆழிப்பேரலையாக நேற்று (12.4.2018) தமிழ்நாட்டில் எழுந்து, பிரதமரை விரைந்து பறந்திடச் செய்தது!

56 இஞ்ச் என்னாயிற்று?

கோபப்படவேண்டிய நேரத்தில், கிளர்ந்தெழ வேண்டிய தருணத்தில் கிளர்ந்தெழுவதே முதுகெலும்புள்ள மக்களுக்கான இலக்கணம்! தமிழ்நாடு, கருப்புடை அணிந்து நீதி கேட்டது. 56 இஞ்ச் பிரதமர் ஏனோ நெஞ்சை நிமிர்த்த இயலாமல், கூனிக்குறுகி, கொழுந்துவிட்டெரியும் நெருப்பு வளையத்தில் சிக்கிக்கொண்ட கற்பூர வில்லையாக தவித்து, உடனடியாக டெல்லி பறந்தோடினார்.

ஒத்துழைப்புத் தந்த மக்களுக்கு நன்றி!

நம்மை மதியாரை நாம் மதிக்கமாட்டோமால் என்ற உணர்வு தமிழ்நாட்டின் பாரம்பரிய உணர்வு! அது எரிமலையின் வெடிப்பாய், ஏகாந்தப் புயலின் சீற்றமாய் நேற்று தமிழ்நாட்டில் காணப்பட்டது! ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டு - வினையாயிற்று - வெளியேறும் நிலையும் ஏற்பட்டது! இதே கொதி நிலை காவிரி ஆணையம் அமையும்வரை தொடருவது உறுதி! உறுதி!! ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்