திருச்சியில் ரயில்வே ட்ராக்கில் பெரிய லாரி டயரை போட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயில் வழக்கமாக நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். அதன்படி கடந்த 2 ஆம் தேதி நள்ளிரவு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த கன்னியாகுமரி விரைவு ரயில் 20 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகச் சென்றுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருச்சி ஸ்ரீரங்கம் நிறுத்தம் தாண்டி லால்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வாளாடி அருகே ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் லாரி டயரை வைத்துள்ளனர். மற்றொரு டயரை ரயில் கடந்து செல்லும் போது மர்ம நபர்கள் குறுக்கே உருட்டியது தெரிய வந்தது.
இதனால் கன்னியாகுமரி விரைவு ரயிலின் அடிப்பகுதியில் உள்ள பிரேக் இன்ஜின், மின் சாதன பெட்டி ஆகியவற்றில் மோதி சேதம் ஏற்படுத்தியதால் நான்கு பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. திருச்சி ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் யார் அந்த லாரி டயரை வைத்தது என்பது குறித்தும் அதற்கான தடயங்களையும் சேகரித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சிறு தொய்வு ஏற்பட்ட நிலையில், லாரி டயர் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த சம்பவம் தொடர்பான இந்த வழக்கை போலீசார் தீவிரப்படுத்தினர்.
தொடர் விசாரணையில் சந்தேகத்தின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், கார்த்திக், வெங்கடேசன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது டாஸ்மாக் ஊழியரான வெங்கடேசன், ‘பெரியார் தெருவில் சாலை போட ரயில்வே அதிகாரிகள் தடையாக இருப்பதாலும், தண்டவாளத்தை கடந்து செல்லும் பொழுது அடிக்கடி அபராதம் விதிப்பதாலும் பழி வாங்கும் எண்ணத்தில் மது போதையில் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தண்டவாளத்தில் டயர்களை போட்டோம்’ என வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.