Skip to main content

'ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு எதுக்கு கார் பரிசு?' - ஐடியா கொடுக்கும் அன்புமணி

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
'Why gift a car to Jallikattu players?'- Idea Anbumani

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''தை மாசம் வந்தாலே நம்முடைய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். நம்முடைய கலாச்சாரம், பண்பாட்டில் இயக்கமாக இருக்கின்றது ஜல்லிக்கட்டு. இது ஒரு வீர விளையாட்டு. உலகத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் இது சொந்தம். நாம் மட்டும்தான் சொந்தம் கொண்டாட முடியும். அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டில் அரசு  என்ன பரிசு அறிவிக்கிறார்கள்.  ஒரு கார். இந்த காரை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்.

அவர் ஒரு விவசாயி. அவர்கள் வீட்டில் கார் நிறுத்துவதற்கு இடம் இருக்கப் போவதில்லை. அவர்களே குடிசையில் இருப்பார்கள். அந்த காரை எங்கு நிறுத்தப் போகிறார்கள். அந்த காருக்கு போடுவதற்கு பெட்ரோல் எங்கே அவர்களுக்கு இருக்கப் போகிறது. அந்த காரை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நல்ல ஒரு டிராக்டர் வாங்கி கொடுங்கள். டிராக்டரில் கேரியர், கலப்பை எல்லாம் போட்டு ஒரு 10 லட்சம் 12 லட்சம் ரூபாய் இருக்க போகிறது. முதல் பரிசு டிராக்டர் வாங்கி கொடுங்கள். அந்த டிராக்டரை வைத்து அவன் சம்பாதிப்பான் அல்லது வாடகைக்கு விட்டுகூட சம்பாதிப்பான். அது ஒரு தொழில். அதில் வருமானம் வரப்போகுது. அதை செய்யுங்கள். சும்மா ஆல்ட்டோ கார் கொடுக்கிறோம், இந்த கார் கொடுக்கிறோம், சோப்பு டப்பா கொடுக்குறோம் என்பதெல்லாம் வேண்டாம். இதுபோன்ற நல்ல பொருள் கொடுங்கள். நல்ல விவசாயம் சார்ந்த பரிசுகளை கொடுங்க'' என புதிய ஆலோசனை ஒன்றை கொடுத்துள்ளார் அன்புமணி.

சார்ந்த செய்திகள்