திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள சோமநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வாங்குவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அங்கு மது வாங்குபவர்கள் சூப்பர்வைசர் ராகவனிடம் தொடர்பாக மோதலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் கூடுதலாக மதுபாட்டிலுக்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வாங்குவது ஏன் என டாஸ்மாக் சூப்பர்வைசர் ராகவன் பேசிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ''சேலத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்மிற்கு தொழிற்சங்கம் மூலமாக பணம் கொடுப்போம். கையில் தருவதில்லை எங்க தொழிற்சங்கம் அக்கவுண்டில் போட்டு விடுவேன். அவர்கள் மூலமாக சேலம் போய்விடும். சேலம் அதிகாரியின் கண்ட்ரோலில் 500 கடை இருக்கிறது. ஒரு கடைக்கு சாதாரணமாக 3,000 என்றால் 500 கடைக்கு ஒன்றரை கோடி ரூபாய்.
இப்போ போடப்பட்டிருக்கும் அதிகாரி பெண். அவர் ஒருநாள் கூட கடைப்பக்கம் வந்தது கிடையாது. அவர் பெயரைச் சொல்லி வரும் நபர்கள் வசூலித்துக் கொண்டு சென்று விடுவார்கள். எஸ்ஆர்எம் ஆபிசிலிருந்து வருகிறோம் என்று சொல்லி செக்கிங் வருவாங்க, கணக்கு பார்த்துட்டு அவங்க தனியா ஒரு அமௌன்ட் எடுத்துட்டு போவாங்க. ஆடிட் வருவார்கள் அவர்களுக்கு 1000 அல்லது 500 ரூபாய் கொடுப்போம். இதையெல்லாம் சரி கட்டுவதற்கு தான் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் வாங்குகிறோம். அப்பக்கூட ஈடு கட்ட முடியவில்லை'' என்றார்.
டாஸ்மாக் சூப்ரவைசர் பேசும் ராகவன் இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் அவரிடம் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.