பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, ரெகாப் இந்தியா பவுண்டேஷன், ரெகாப் பவுண்டேஷன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, தேசிய மகளிர் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட் ஆகிய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் அவ்வமைப்பின் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ''பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவாக இருக்கட்டும், எஸ்டிபியாக இருக்கட்டும் என்னுடைய கருத்து ஒன்றுதான். என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை சொல்கிறது கடந்த காலங்களில் நிகழ்ந்த சில சம்பவங்கள் இருக்கிறது எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேச நலனுக்காக விசாரணை செய்கிறோம், நடவடிக்கை எடுக்கிறோம் என்று. அப்போது இதேபோல் மதத்தைச் சார்ந்து உள்ள மற்ற இயக்கங்கள் இருக்கிறது.
பாஜகவுடன் தொடர்பில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தல், விஹெச்பி உள்ளிட்ட அமைப்புகள் இருக்கிறது. அவர்களால் வட இந்தியாவில் கடந்த காலங்களில் பல கலவரங்கள் நிகழ்ந்துள்ளது. ஏன் அந்த அமைப்புகளுக்கு நீங்கள் விசாரணை வைக்கவில்லை. அப்படி விசாரணை வைத்தால் எல்லோருக்கும் சம அளவில் வைக்க வேண்டும். இந்த விசாரணை வைத்ததற்கு பிறகு நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் கொங்கு பகுதியில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்ந்துள்ளது. அப்பொழுது இதில் நோக்கம் என்னவென்றால் அண்ணன் தம்பிகளாக இருக்கும் இந்து சகோதர முஸ்லீம் சகோதர உறவில் ஒரு வேற்றுமையை உருவாக்கி தங்களது வாக்கு வங்கியை நிரப்ப வேண்டும் என சில சக்திகள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு நாம் பலியாகிவிடக்கூடாது'' என்றார்.