2016ம் ஆண்டு ஏன் தனித்துப்போட்டியிட்டோம் என்பதற்கான காரணத்தை ஏழு ஆண்டுகள் கழித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவராக இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் இதனைக் கொண்டாடும் விதமாக திமுக சார்பில் சென்னை கொரட்டூரில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு, விசிக தலைவர் திருமாவளவன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய திருமாவளவன், " 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது.
ஆனால் அது அனைத்தும் உண்மை அல்ல. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற உடனேயே எங்களை அழைத்துப் பேசிய ஸ்டாலின், 2016ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக 200க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இனி நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள் என்றார். அதன் காரணமாகவே வேறு நிலைப்பாடு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நாங்கள் என்னவோ திமுகவிற்கு எதிராகச் சதி செய்ததாகக் கூறுவதை எப்படி ஏற்பது" என்றார்.