திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்த மத்திய அரசின் தணிக்கை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யக் கோருதல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் வழங்குவது மற்றும் மாநிலங்களின் நிதி தன்னாட்சியை பாதிக்கும் 15வது மத்திய நிதி ஆணைய ஆய்வு வரம்பு ஆகிய முக்கிய பிரச்னைகள் குறித்து, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து ஆற்றிய உரை விவரம்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
துணை முதலமைச்சர் அவர்கள் இந்த அவையில் ஒரு நல்ல உறுதிமொழியை வழங்கியிருக்கிறார். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலை என்னவென்றால், தீர்ப்பு வெளிவந்தவுடன், “6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது”, என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் ஒரு ஆங்கில பத்திரிகையில் அளித்திருந்த பேட்டியை நாம் பார்த்தோம். காவிரி விவகாரம் குறித்து நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்களின் கூட்டம் முடிந்தபிறகு, “காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லை”, என்று மத்திய நீர்வளத்துறையின் செயலாளர் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். நேற்றைய தினம், மத்திய நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி.சிங் அவர்கள், ”6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது”, என்று பேட்டியளித்து இருக்கிறார்.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய, அந்தத் துறையின் செயலாளரே இப்படியொரு பேட்டி தந்திருக்கும் சூழ்நிலையில், நான் ஏற்கனவே இந்த அவையில் கேட்டுக் கொண்டதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தின் பிரச்னையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதுபோல, நம்முடைய மாநிலத்தின் பிரச்னை தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென நாம் பல முயற்சிகளில் ஈடுபட்டும், எதற்கும் பயனில்லை என்ற சூழலில், மத்திய அரசு மீது ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக அரசு, அங்கேயிருக்கின்ற உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக கொண்டு வந்து, ஒரு அழுத்தம் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
அதுமட்டுமல்ல, 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான பணியில், இந்த அரசு உடனே ஈடுபட வேண்டுமென்று, இந்த அரசின் கவனத்தை ஈர்த்து, அதேபோல, 15வது மத்திய நிதி ஆணையத்துக்கு கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய ஆய்வு வரம்பு, மாநிலங்கள் நிதித் தன்னாட்சியை பாதிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்னொரு முக்கியமான பிரச்னை, 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது, செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பு இல்லாமல் திறந்து விடப்பட்ட காரணத்தால், சென்னையை சுற்றியிருக்கின்ற புறநகர் பகுதிகள் எல்லாம் மூழ்கி, பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, உடமைகளை இழந்த நிலை அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து, மத்திய அரசு ஒரு ஆடிட் ரிப்போர்ட்டை இந்த அரசுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால், அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டிக்கு அந்த அறிக்கை இதுவரை வைக்கப்படவில்லை. சட்டமன்றத்திலும் இதுவரையில் அந்த ஆடிட் அறிக்கையை வைக்காமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை, அதில் அரசின் குறைபாடுகள், அரசு செய்துள்ள தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்ற காரணத்தால், சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நான் அறிகிறேன். எனவே, இதுகுறித்து அரசின் கவனத்தை ஈர்த்து நான் அமைகிறேன்.