மாநில உணர்வுகளை வைத்து பிரித்தாழும் சூழ்ச்சியை பயன்படுத்துவது அபாயகரமானது, அது தேசத்திற்கு நல்லது அல்ல என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
பா.ஜ.க வின் உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
காங்கிரஸ் டெபாசிட் இல்லாததால் மின்னனு வாக்கு இயந்திரத்தை பற்றி பேசுகிறது. எந்த இயந்திரத்தை வைத்தாலும் காங்கிரஸால் டெபாசிட் கூட வாங்க முடியாது. இந்த முறையை மாற்றுவது நாட்டை பின்நோக்கி இழுத்து செல்லும் முயற்சி.
தமிழகத்தில் பா.ஜ.க வலுப்பெற்று வருகிறது. பா.ஜ.கவின் உதவி இல்லாமல் தமிழகத்தில் வரும் காலத்தில் ஆட்சி அமைக்க முடியாது. உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு உடனே நடத்த வேண்டும். உச்சநீதிமன்றம் கூறியதை மத்திய அரசு தெளிவாக செய்து கொண்டிருக்கிறது. காவிரியை வைத்து அரசியல் செய்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும்.
நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். மாநில உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். மாநில உணர்வுகளை வைத்து பிரித்தாழும் சூழ்ச்சியை பின்பற்றுவது அபாயகரமானது, தேசத்திற்கு நல்லதல்ல. தென்பகுதிகளுக்கு பா.ஜ.க வந்ததற்கு பிறகு பல்வேறு திட்டங்களை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.