சண்டியர் போல் உள்ள அந்த நபரிடமிருந்து எங்களை காப்பாற்றுங்க... என ஊரே திரண்டு வந்து ஒரு நபர் மீது புகார் மனு கொடுத்தது ஆச்சரியமாகத்தான் இந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்த கெஞ்சனூர், இக்கரை நெகமம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் கதிரவனிடம் ஒரு மனு கொடுத்தார்கள்.
பிறகு அவர்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் நாங்கள் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் தொடர்ந்து ஊரைச் சுற்றி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சென்ற 14 ம் தேதி எங்க ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ரோட்டில் சென்றுகொண்டிருந்தார் அப்போது அந்த இளைஞர் ஆட்டோவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதோடு ஆட்டோவை கல்லால் தாக்கி சேதப்படுத்திள்ளார்.
இது குறித்து ஒரு மக்கள் நாங்கள் அனைவரும் அவரிடம் நியாயம் கேட்க சென்ற போது அந்த நபர் எங்களையும் கேவலமாக தரக்குறைவாக பேசினார். எங்கள் வீடுகளிலும் கல்லால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார். அந்த நபரால் நாங்கள் துன்பப்படுகிறோம் ரவுடி போல எங்களை மிரட்டுகிறார். இரவு நேரங்களில் அச்சத்துடன் இருக்கிறோம் எனவே சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் புகார் கொடுத்தோம் என்றனர். ஊருக்கு ஊர் ஏதோவொரு சண்டியர் இருக்கத்தானே செய்கிறார்கள்.
அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் வந்து ஒரு மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அதில் அவர்கள். "கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனத்திற்கு குத்தகைதாரர் இரட்டை வரி வசூல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். குற்ற சம்பவத்தை தடுக்கும் வகையில் கொடிவேரி அணை பகுதியில் அமைந்துள்ள புற காவல்நிலையத்தில் போலீசார் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டும்.
பராமரிப்பு மற்றும் பயன்பாட்டில் இல்லாத கண்காணிப்பு கோபுரத்தை பராமரித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு விட வேண்டும். பெண்களுக்கு உடைமாற்றும் அறை அமைத்து தரவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.