மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சி மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை விரிவாக்க மையத்தின் புதிய கட்டடங்கள் திறப்பு விழா அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்டச் செயலாளருமான நிவேதா முருகன், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மணல்மேடு வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து, குருவை தொகுப்பு திட்டத்தை விவசாயிகளுக்கு வழங்க துவங்கினார், அப்போது “எனக்கு தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக விழா ஏற்பாடு செய்யவேண்டிய அவசியம் என்ன, என்னை புறக்கணித்துத் திறப்பு விழா நடக்கிறதா” என விழா நடக்கும் போதே நேரடியாக குற்றம் சாட்டி பேசினார் எம்.எல்.ஏ ராஜ்குமார்.
அதோடு, “யாரிடம் சொல்லிவிட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தீர்கள்” என்று மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் முன்னாடியே காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜகுமார் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், “எல்லோரும் அமைதியா இருங்க. இல்லையென்றால் அனைத்து நிகழ்ச்சியும் கேன்சல் செய்து விடுவேன். மூன்றாவது கண்ணாக பத்திரிகையாளர்கள் பார்க்கிறார்கள்” என்று சொல்லி, மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை சமாதானம் செய்யும் விதமாக மரக்கன்று நட்டு வைக்க சொல்லி அவரது கையை பிடித்து இழுத்து சமாதானம் செய்தார்.
முதல் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. உடன் வாக்குவாதம் நடைபெற்று அமைச்சர் சமாதானம் செய்துவைத்த நிலையில், திருமங்கலத்தில் நடைபெற்ற அடுத்த நிகழ்ச்சியிலும் அதேபோல் ஒரு நிகழ்வு நடந்தது. திருமங்கலத்தில், நடைபெற்ற வேளாண்மை விரிவாக்க மைய கட்டட திறப்பு விழாவில் திமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரான சுரேஷ், “நிகழ்ச்சிகள் குறித்து யாருக்கும் தகவல் சொல்வதில்லை; அழைப்பிதழில் எங்கள் பெயர் கூட போடுவதில்லை, உள்ளாட்சி பிரதிநிதிகள் என்றால் அவ்வளவு கேவலமா?” என்று அமைச்சர் முன்னிலையில் பேசினார்.
இதனால், ஆத்திரமடைந்த மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன், “பொது வெளியில் இதையெல்லாம் பேசாதீங்க” எனச் சொல்ல, அங்கேயும் சமாதானம் செய்த அமைச்சர், விவசாயிகளுக்கு குருவை தொகுப்பு திட்டத்தை வழங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.