இராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட ஆற்காடு நகரத்தில் 30 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 2 வார்டுகளில் ஆளும் கட்சியைத் தவிர்த்து மற்ற வேட்பாளர்கள் போட்டியிடாததால், அன்னபோஸ்டாக இரண்டு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால் 28 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இதில் 16 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக 4 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி 3 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சைகள் 3 பேரும் வெற்றி பெற்றனர்.
தற்போது திமுகவிடம் 18 கவுன்சிலர்கள், சுயேட்சைகள் ஆதரவு, கூட்டணி கட்சி கவுன்சிலர்களோடு சேர்த்து 22 கவுன்சிலர்களோடு பெரும் பலத்தோடு உள்ளது. இதனால் ஆற்காடு நகரத்தை ஆட்சி செய்யப்போவது திமுக என்பது உறுதியாகியுள்ளது.
சேர்மன் பதவி பொது பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக சேவகராகவுள்ள தொழிலதிபர் பென்ஸ்.பாண்டியன், திமுகவில் சில மாதங்களுக்கு முன்புதான் இணைந்தார். தனக்கு, தன் மனைவி ஸ்ரீதேவி, தனது தம்பி மனைவி ராஜலட்சுமிக்கு கவுன்சிலர் சீட் வாங்கி மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றதோடு நகரமன்ற தலைவராக தனது மனைவியை அமர்த்த வேண்டுமென ஆற்காடு எம்.எல்.ஏவான ஈஸ்வரப்பன் மூலமாக காய் நகர்த்துகிறார்.
திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் மகனும், மாவட்ட மருத்துவர் அணியைச் சேர்ந்த டாக்டர் சரவணன் தனது மனைவி பொற்கொடியை சேர்மன் பதவியில் அமர்த்த அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான காந்தி நினைக்கிறார்.
தனது மனைவியை நகர மன்ற தலைவர் வேட்பாளராக அறிவிக்கவில்லையெனில் திமுக நிறுத்தும் வேட்பாளருக்கு போட்டியாக தனது மனைவியை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துகிறார் கவுன்சிலர் பென்ஸ் பாண்டியன் என்கிறார்கள் திமுகவில் உள்ள சிலர்.