இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவுமாறு அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார சிக்கல் காரணமாக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவிகளை வழங்க மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது என தெரிவித்திருந்த தமிழக முதல்வர், '40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகள் தமிழகம் சார்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது. இதற்காக நன்கொடை வழங்க வேண்டும்' எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தநிலையில் இலங்கைக்கு பொருட்களை அனுப்ப நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது. இலங்கைக்கு அனுப்ப நிவாரண பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு, நிவாரணப்பொருட்கள் அடங்கிய பை மீது 'தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற கப்பல் தற்போது இலங்கை துறைமுகம் சென்றடைந்தது.