சேலம் மாநகராட்சி மேயர் பதவி யாருக்கு என்பதில் தி.மு.க.வில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடிப்பது, கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் நாளுக்குநாள் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க. நேரடியாக 48 இடங்களிலும், காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 12 இடங்களிலும் போட்டியிட்டன. தி.மு.க. கூட்டணி 50 இடங்களை வென்று, பத்தாண்டுகளுக்குப் பிறகு மேயர் பதவியைக் கைப்பற்றி உள்ளது.
மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் தி.மு.க.வில் இந்தமுறை கடும் போட்டி நிலவுகிறது. மேயருக்கான யூகப்பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும், பதவிக்காக கட்சி மேலிடத்தை ஒவ்வொரு வழிகளில் வட்டமடித்து வருகின்றனர்.
சேலம் மாநகர தி.மு.க. அமைப்பாளரும், 28- வது வார்டு கவுன்சிலருமான ஜெயக்குமார் (வயது 50), மேயர் பதவிக்கான ரேஸில் முதலிடத்தில் இருப்பதாக பலமான பேச்சு அடிபடுகிறது. துளுவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரான ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வின் நம்பிக்கைக்குரிய வட்டத்தில் இருப்பவர். பி.காம்., பட்டதாரியான ஜெயக்குமார், லாரி புக்கிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய தந்தை ஜெயராமன், தொடக்க காலத்தில் செவ்வாய்பேட்டை பகுதியில் கட்சியை வளர்த்ததில் முக்கிய பங்காற்றியவர்.
ஜெயக்குமார் மாநகர பொறுப்புக்கு வந்த பிறகு, வர்த்தகர்கள் நிரம்பிய செவ்வாய்பேட்டையில் கடந்த காலத்தில் தி.மு.க.வுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயரை மெல்ல மெல்ல நீங்கச்செய்தார். அதனாலும் மாவட்டச் செயலாளரின் குட்புக்கில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். உளவுப்பிரிவும், ஐபேக் டீமும் இவரைப் பற்றி நல்ல விதமாகவே கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அடித்திருக்கிறது.
இதையடுத்து, 18- வது வார்டு கவுன்சிலர் சர்க்கரை ஆ.சரவணன் (வயது 53) பெயரையும் மேயர் பதவிக்கு பலமாக உச்சரிக்கிறார்கள். ஏற்கனவே கவுன்சிலர், மண்டலக்குழுத் தலைவராக இருந்த அனுபவம் உள்ளவர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். கட்சி காலால் இட்ட உத்தரவை தலையால் செய்து முடிக்கக் கூடியவர் என மாவட்டச் செயலாளரிடம் பெயரெடுத்திருக்கிறார். கட்டட காண்டிராக்டர். கிளீன் இமேஜ்க்கு சொந்தக்காரர் என்பது இவருடைய பிளஸ் பாயிண்ட்.
அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளில் பழுத்த அனுபவம் வாய்ந்தவரான 26- வது வார்டு கவுன்சிலர் எஸ்.டி.கலையமுதன் (வயது 79) பெயரும் மேயர் ரேஸில் அடிபடுகிறது. தெலுங்கு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. அவைத்தலைவரான இவரும் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனின் குட்புக்கில் இருந்தாலும் கூட, வயது மூப்பு ஒரு தடையாக கவனிக்கப்படுகிறது. ஆனாலும் மேயர் பதவிக்கான ரேஸில்தான் கலையமுதனும் இருக்கிறார் என்கிறார்கள்.
இவர்கள் தவிர, 52- வது வார்டு கவுன்சிலர் 'அசோக் டெக்ஸ்' அசோகன், 56- வது வார்டு கவுன்சிலர் சரவணன், 15- வது வார்டு கவுன்சிலர் உமாராணி ஆகியோரும் மேயர் பதவியைக் கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ''கவுன்சிலர் உமாராணிக்கு, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் உடன் நல்ல நட்பு உள்ளது. அவருடைய மருமகன், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாநில பொறுப்பிலும் இருக்கிறார். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு உமாராணி, மேயர் பதவியை கைப்பற்றிவிடுவார் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே ஒரு பேச்சு பலமாக அடிபடுகிறது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் சென்னை உள்பட 11 மாநகராட்சிகளில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. அவ்வாறு இருக்கையில், சேலம் மாநகராட்சி மேயராகவும் ஒரு பெண்ணை அமர்த்துவதில் கட்சி ஆர்வம் காட்டாது. நிச்சயமாக இங்கு ஆண்தான் மேயர். அதனால் மேயர் ரேஸில் உமாராணி இல்லை என்று சொல்ல முடியும். அதேநேரம் அவர் துணை மேயர் அல்லது மண்டலக்குழுத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
அமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. அப்படி இருக்கும்போது, அமைச்சர் அந்தஸ்தில் உள்ள மேயர் பதவியை, அவர் தனக்குக் கட்டுப்பட்ட ஒருவருக்கு வழங்கவே கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்வார்.
ஒருவேளை, சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேருவின் தலையீட்டால் ராஜேந்திரனுக்கு எதிர் முகாமில் உள்ள ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்கும் பட்சத்தில், அது மேயர் - மாவட்டச் செயலாளர் என இருதுருவ அரசியலாக மாறிவிடும். கட்சியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமாக இருக்காது. அதனால் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இருந்துதான் மேயர் பதவிக்கான பெயர்களை தளபதியும் 'டிக்' செய்வார்,'' என்கிறார்கள் தி.மு.க.வினர்.
மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார் அல்லது சர்க்கரை ஆ.சரவணன் ஆகிய இருவரில் ஒருவருக்கு மேயர் ஆவதற்கான கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. எதுவாயினும் முதல்வர் கையில்தான் இறுதி முடிவு.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மார்ச் 2- ஆம் தேதி பதவி ஏற்கின்றனர். அன்றைய தினமே மேயர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4- ஆம் தேதி நடக்கிறது. அதுவரை, புதிய மேயர் யார்? என்ற சஸ்பென்ஸ் தொடரும்.