சேலம் ஆவினில் தினசரி பால் கொள்முதல் 15 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 614 ஆவின் பால் முகவர்கள் உள்ளனர். மொத்த விற்பனையாளர்கள் 25 பேர் உள்ளனர். மாவட்டம் முழுவதும் முகவர்கள் மூலம் 187 பாலகங்களும், 10 ஆவின் ஒன்றியப் பாலகங்களும், நிர்வாகம் நேரடியாக நடத்திவரும் ஒரு ஹைடெக் பாலகமும் செயல்பட்டுவருகின்றன.
தற்போது நாளொன்றுக்கு 1.66 லட்சம் லிட்டர் பால் சில்லரை விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது. தினசரி பால் கொள்முதல் 15 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளது. இதன்மூலம் மாதம் 13 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. தினசரி பால் விற்பனையை 2 லட்சம் லிட்டராக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பால் பொருட்கள் விற்பனை மாத சராசரி 1.80 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு ஆண்டு 2.20 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பால் பொருட்கள் விற்பனையை 4 கோடி ரூபாயாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் யூ.ஹெச்.டி. பால், நறுமணப் பால் ஆகியவை சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசு புதிதாக 500 ஆவின் பாலகங்கள் தொடங்க அனுமதி அளித்துள்ளது. இதில் சேலம் ஆவினுக்கு 35 பாலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சேலம், மேட்டூர், வாழப்பாடி, ஆத்தூர், எடப்பாடி ஆகிய பகுதிகளில் நவீன பாலகங்கள் அமைக்கப்பட்டு, விரைவில் அவை பயன்பாட்டிற்கு வர உள்ளன.
சேலம் ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் கால்நடைத் தீவனங்கள் விற்கப்படுகின்றன. மாதத்திற்கு சராசரியாக 1,600 டன் தீவனம் விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.