தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர் கையிலிருந்த குழந்தையுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அப்பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது அவர் கொடுத்த புகார் மிகவும் விசித்திரமாக இருந்தது.
பிபிஏ பட்டதாரியான அந்த பெண் கரோனா ஊரடங்கு காலத்தில் அவரது செல்போனுக்கு வந்த தவறான அழைப்பால் இசக்கிமுத்து என்ற லாரி ஓட்டுநருடன் பேசி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு காதலில் முடிந்தது. நெருங்கிப் பழகி வந்துள்ளனர். பின்னர் அவர் தன்னை வேண்டாம் என்று விட்டுச் சென்ற பிறகு இசக்கிமுத்துவின் நண்பரிடம் நம்பி பழகியதாகவும் அவரும் நம்ப வைத்து விட்டுச் சென்றதால், இளைஞர் ஒருவரை காதலித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இசக்கிமுத்துவும், இரண்டாவது காதலனும் மீண்டும் பழகியதால் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் இளம்பெண் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வீட்டிலேயே பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த தகவலை மூன்று காதலர்களுக்கும் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் மூன்று பேரும் இந்த குழந்தை தங்களுக்கு பிறக்கவில்லை என்று மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். மூன்று பேரின் பேச்சை நம்பி பழகி தற்பொழுது குழந்தையுடன் அவதிப்படுகிறேன். அவமானம் தாங்காமல் என்னுடைய அம்மா உயிரிழந்து விட்டார். எனவே தனது குழந்தையின் தந்தையை கண்டுபிடித்து தர வேண்டும் எனக் கண்ணீர் மல்கப் புகார் அளித்தார். அந்த பெண்ணின் புகாரைப் பெற்ற மணியாச்சி டிஎஸ்பி யோகேஸ்வரன், அந்த பெண்ணிற்கு உதவி செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து போலீசார் குழந்தை பராமரிப்பு செலவுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்து குழந்தைக்குத் தேவையான ஆடைகளை வாங்கி குழந்தையை போலீசாரே பராமரித்து வருகின்றனர்.
முதல் காதலரான இசக்கிமுத்துவை போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தைக்கு அவர் காரணமல்ல எனத் தெரிந்து இசக்கிமுத்து அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது காதலர்களை போலீசார் தேடி வந்த நிலையில், மூன்றாவது காதலனான இளைஞன் கஞ்சா வழக்கில் சேலம் சிறையில் சில மாதங்களாக அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இரண்டு பேரில் யார் தந்தை என அறிய போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.