புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அவசரக் காலங்களில் பொதுப் பயன்பாட்டுக்காகவும், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கவும் ஏதுவாக இருந்த சுமார் 4 ஏக்கர் நிலத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கியது. அப்போது பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கினால் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க வேறு இடமில்லாமல் போய்விடும். அதனால் பூங்கா அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால் பணிகள் நிறுத்தப்படவில்லை. தற்போது தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க இடமில்லாமல் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தேங்கி நிற்கிறது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பணிகள் தொடங்கி நடந்த நிலையில் தற்போதைய ஆட்சிக் காலத்தில் பணிகள் முடிக்கப்பட்டு விளையாட்டு, பொழுதுபோக்கு உபகரணங்கள், நடைபயிற்சி பாதைகள் அமைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 24 ந் தேதி திறக்கப்பட்டது. பூங்காவிற்குள் பொழுது போக்க செல்லும் குழந்தைகள் உள்பட அனைவருக்கும் ரூ.20 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து தேர்தல் காலத்தில் மட்டும் நுழைவுக் கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டு மீண்டும் வசூல் தொடர்ந்தது. மேலும் உள்ளே உள்ள சில உபகரணங்களை பயன்படுத்த தனித்தனியாக வசூல் நடந்தது.
இந்நிலையில் தான் கலைஞர் பூங்காவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் நிராகரித்து வந்தது. மாநகராட்சி நிர்வாகத்தின் நிராகரிப்பை அடுத்து 'நுகர்வோர் நலன் மக்கள் விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கம் தமிழ்நாடு' புதுக்கோட்டை கிளை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மாநகராட்சி ஆணையர் நாராயணன் 11 ந் தேதி கொடுத்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, புதுக்கோட்டை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள கலைஞர் பூங்கா கடந்த 24.02.2024 அன்று திறக்கப்பட்டது. தற்போது பொதுமக்களிடம் எவ்வித நுழைவுக் கட்டணம் வசூலிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் கொடுக்கப்பட்ட பிறகு நுழைவுக்கட்டணம் வசூலை நிறுத்தி உள்ளனர். அப்படியானால் இதுவரை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பூங்காவில் அனுமதி இல்லாமல் நுழைவுக் கட்டணம் வசூல் செய்தது யார்? எவ்வளவு தொகை பொதுமக்களிடம் பறிக்கப்பட்டது. இதுபோன்ற நபர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் வசூலித்த தொகையை வசூலிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் நடத்தவும் சமூக ஆர்வலர்கள் தயாராகி வருகின்றனர்.