தமிழக அரசின் பொதுத் துறைகளில் மிக முக்கியமானது தமிழ்நாடு மின்சார வாரியம். மக்களின் இன்றியமையாத சேவையை வழங்குவதால் இந்த வாரியத்தின் அதிகாரிகள் எப்போதும் சீரியசாகவே இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அப்படி இருப்பதில்லை. உயரதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை பெரும்பாலும் ஜாலியாகத்தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், வாரியத்தின் சேர்மனாக உயரிய பதவியில் இருக்கும் விக்ரம்கபூர் ஐ.ஏ.எஸ். திடீரென விடுமுறை எடுத்துக்கொண்டு இலங்கைக்கு டூர் கிளம்பிவிட்டார். சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தலைமைச்செயலகத்திலும் வாரிய வட்டாரத்திலும், விக்ரம் கபூர் வெளிநாடு சென்றிருப்பது தெரியாததால், ’சேர்மன் எங்கே? ‘ என தேடித்தேடி, அவர் இலங்கைக்கு சென்றிருக்கிறார் என தற்போதுதான் அறிந்திருக்கிறார்கள்.
இது குறித்து மின்சார வாரியத்தில் விசாரித்தபோது, ‘’ கோடை காலம் துவங்கவிருக்கிறது. அதனை முன்னிட்டு, மக்களின் தினசரி மின் தேவை அதிகரித்து வரும் சூழலில், முன் கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மின்வரியத்தின் கடமை. இதற்காக பல ஆலோசனைகள், விவாதங்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் விடுமுறை எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்குப் பறந்திருக்கிறார் சேர்மன். அது மட்டுமல்ல, தற்போது சட்டமன்றம் நடந்து வருகிறது. பொதுவாக, இப்படிப்பட்ட நேரத்தில் முக்கிய துறைகளின் உயரதிகாரிகள் லீவ் எடுக்க மாட்டார்கள். அதையும் மீறி லீவ் எடுக்க அனுமதிக் கேட்டாலும் அதனை முதலமைச்சரோ, தலைமைச்செயலாளரோ ஏற்கமாட்டார்கள். இந்த நிலையில், விக்ரம்கபூர் லீவ் விசயத்தில் முதலமைச்சருக்கும் தலைமைச்செயலாளருக்கும் லடாய் நடந்திருக்கிறது ‘’ என்கிறார்கள்.
இது பற்றி கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’ ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளிநாட்டிற்குப் போவதாக இருந்தால் தலைமைச்செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும். ஒருவேளை அவர் அனுமதி தர மறுத்தால் முதலமைச்சரிடம் அனுமதி பெற்று செல்ல முடியும்.
மின்வாரியத்தில் செயல்படுத்த வேண்டிய சில திட்டங்கள் குறித்து சமீபத்தில் பல்வேறு கேள்விகளை சேர்மன் விக்ரம் கபூரிடம் எழுப்பியிருக்கிறார் தலைமைச்செயலாளர் சண்முகம். அதனையொட்டி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்திருக்கிறது. இதனால், விடுமுறை எடுத்துக்கொண்டு வெளிநாடு செல்ல திட்டமிட்டு, விடுமுறைக்கு அப்ளை செய்திருக்கிறார் விக்ரம்கபூர். ஆனால், சட்டமன்ற கூட்டம் துவங்க விருப்பதால் லீவுக்கு ஒப்புதல் தர மறுத்திருக்கிறார் சண்முகம். அதனையடுத்து சில லாபிகளை பயன்படுத்தி முதல்வர் எடப்பாடியிடம் அனுமதிப்பெற்றுக்கொண்டு வெளிநாட்டிற்கு பறந்துவிட்டார் சேர்மன். இந்த விவகாரத்தில் எடப்பாடிக்கும் சண்முகத்துக்குமிடையே லடாய் (மனவருத்தம்) வெடித்திருக்கிறது. அதேசமயம், விக்ரம் கபூர் வெளிநாடுக்குப் பறந்தது பற்றி 2 நாள் வரை அதிகாரிகளுக்குத் தெரியாததால், எங்கே சேர்மன் ? என ஒரே பரபரப்பாக இருந்தது ! ‘’ என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.