Skip to main content

கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு எங்கே? 18 ஆண்டாகப் போராடும் 85 வயது முதியவர்

Published on 26/08/2022 | Edited on 26/08/2022

 

Where is the compensation for acquired land? An 85-year-old man who has been fighting for 18 years!

 

வீட்டுமனைத் திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீடு கேட்டு, 18 ஆண்டாக அலைக்கழிக்கப்பட்டு வந்த 85 வயது முதியவர், வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்யும் அதிரடி செயலில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள தட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் மாரகவுண்டர் (85). இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் அலுவலகம், இலவச வீட்டுமனைத் திட்டத்திற்காக கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் அதற்காக உரிய இழப்பீடு தொகை மாரகவுண்டருக்கு வழங்கவில்லை. இதுகுறித்து அவர் கடந்த 2004ம் ஆண்டு, தர்மபுரி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2008ம் ஆண்டு இந்த வழக்கு அரூர் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 

 

கடந்த 2012ம் ஆண்டு, மாரகவுண்டவுக்கு இழப்பீட்டுத் தொகை 13 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம் கடத்தி வந்ததால், மாரகவுண்டர் கடந்த 2015ம் ஆண்டு நிறைவேற்று மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு அசல் இழப்பீடு, வட்டி ஆகியவை சேர்த்து 22 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இந்த தொகை வழங்கத் தவறினால் வட்டாட்சியர் அலுவலக பொருள் ஜப்தி செய்யப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. 


இந்த உத்தரவையும் மதிக்காமல் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் அலுவலகம் கிடப்பில் போட்டது. இதையடுத்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜா மற்றும் சார்பு நீதிமன்ற அமீனா ஆகியோர் தர்மபுரி ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் அலுவலக பொருள்களை ஜப்தி செய்வதற்காக ஆக. 24ம் தேதி சென்றனர். 


அங்குள்ள மேஜை, நாற்காலி, கணினி பிரிண்டர் ஆகிய பொருள்களை எடுத்து வெளியே வைத்தனர். அப்போது மாரகவுண்டர் தரப்பினரிடம் வருவாய்த்துறை அலுவலர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இழப்பீடு தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு கலைந்து சென்றனர். 


இந்த சம்பவம் வருவாய்த்துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்