தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் சென்னை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பென்னேரி, ஆரணி, பெரியபாளையம், பழவேற்காடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று திருவாரூர், மாங்குடி, மாவூர், திருநெய்பேர், குன்னியூர், புலிவலம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. அதோடு நாகப்பட்டினம், நாகூர், திருமருகல், திட்டச்சேரி, திருப்பூண்டி, திருக்குவளை, கீழையூர் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (20.12.2024) வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலை 10 மணிக்குள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய இரு மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று காலை 10 மணிக்குள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.