
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள கிளாக்காடு பகுதியில் விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு விற்பனை செய்வதாக கரியாலூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் ஏழுமலை, கரியலூர் உதவி ஆய்வாளர் ஜெகதீசன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் காவலர்கள் கிளாக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிளாக்காடு எல்லைக்குட்பட்ட பெருமாநத்தம் சோலைமலை உச்சியில் அதே கிராமத்தைச் சேர்ந்த பர்வதம், கோவிந்தன் ஆகியோர் சோலைமலை உச்சியில் கஞ்சா செடிகள் வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டு 104 கிலோ எடை கொண்ட கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பர்வதம் மற்றும் கோவிந்தன் ஆகிய இருவரையும் கைது கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.இதனிடையே அங்கிருந்து தப்பி ஓடிய குமரன் மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த காலங்களில் எங்கோ ஒரு இடத்தில் யாரோ ஒருவர் கஞ்சா செடி வளர்த்து வருவதாக புகார் அளிக்கப்படும். ஆனால், தற்போது மலையின் பல இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு இடத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி வளர்ப்பதை கண்டுபிடித்து அழித்து உள்ளனர். வனத்துறை தொடர் ஆய்வு செய்து கஞ்சா செடி வளர்ப்பதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.