திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இன்று (20.12.2024) காலை கீழநத்தம் என்ற பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்ற வாயிலில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை சுற்றி வளைத்து நீதிமன்ற வளாகத்திற்கு விரட்டினர். அதன் பின்னர் அவர் உயிருக்குப் பயந்து ஒடிய நிலையில் மீண்டும் நீதிமன்ற வாயில் அருகே வந்துள்ளார். அச்சமயத்தில் அவரை நீதிமன்ற வாயிலில் வைத்து கொடூரமான முறையில் முகம் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக வெட்டி படுகொலை செய்தனர்.
அதன் பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் இந்த கொலையில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த படுகொலை கண்டித்து நீதிமன்றத்தின் அருகே உள்ள வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என முழக்கமிட்டனர். இதனால் திருநெல்வேலியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் நடமாட்டம் உள்ள பொது இடத்தில் பட்டப்பகலில் நடைபெற்ற படுகொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே இந்த கொலை நடந்த இடத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிவா, மனோராஜ். தங்க மகேஷ் என மூவர் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் இந்த கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘எங்கும் கொலை; எதிலும் கொலை’ என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல. திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி. இதுமட்டுமின்றி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் செய்திகளில் வந்தவை: சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு, சிவகங்கையில் தாயின் கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை. சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து.
‘தனிப்பட்ட கொலைகள்’ என்று இன்னும் எத்தனை நாட்கள் தான் முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடந்து செல்லப் போகிறது?. நிர்வாகத் திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். மேற்சொன்ன குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், போட்டோஷூட்டிலும், மடைமாற்று அரசியலிலும் மட்டுமே செலுத்தும் கவனத்தை தனது முதல் பணியான சட்டம் ஒழுங்கை காப்பதிலும் செலுத்துமாறு திமுக முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.