
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 9 மற்றும் 10ஆம் தேதி என இரு நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழகச் சட்டமன்ற பேரவையில் வருகிற ஜனவரி மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றம் கூட உள்ளது. அன்றைய தினம் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி காலை 09.30 மணிக்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 174 உட்பிரிவு 1இன் கீழ் உரையாற்ற உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், ‘சட்டமன்ற கூட்டத்தொடர் குறைந்த நாட்கள் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்குச் சபாநாயகர் அப்பாவு, “கடந்த 2011 முதல் 2021 வரையிலான காலத்தில் குளிர்கால கூட்டத் தொடரின் போது இரண்டு நாட்கள் தான் கூட்டத்தொடர் நடத்தியுள்ளனர். அதற்குக் காரணம் என்னவென்றால் இந்த கூட்டத்தொடரில் கூடுதல் செலவினத்திற்கான மசோதாவை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அதைப் பற்றி பெரிய அளவில் விவாதம் இருக்காது. அதற்கு முன்னால் தமிழக மின்வாரியம் பற்றிய மசோதாவும் இருக்கும் .எனவே ஜனவரி பட்ஜெட்டில் மின்வாரியம் அதற்கான விவாதம் ஏற்படாது. அதனால் குளிர்கால கூட்டத்தொடர் ஒரு வாரம், 10 நாட்கள் வரை நடைபெற்றன.
அதிலும் குறிப்பாக 2011 முதல் 2021 வரையிலான குளிர்கால கூட்டத்தொடர் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் தற்போது அனைத்தும் மசோதாக்களும் கூடுதல் நேரம் ஏற்பட்டாலும் விவாதம் நடத்தி நிறைவேற்ற முதல்வர் கூறியுள்ளார். அது மட்டுமின்றி இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் அறிவித்த பின்னர் சட்டமன்றத்தை நடத்த முடியாது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், கடந்த ஆண்டு டிசம்பரில் வெள்ள பாதிப்பாலும் அரசு இயந்திரம் களத்தில் செயல்பட்டதால் அதிக நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த முடியவில்லை” என விளக்கமளித்தார்.