தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘ஐம்பெரும் விழா’ இன்று (14.06.2024) காலை 11.00 மணியளவில் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 22 ஆயிரத்து 931 திறன்மிகு வகுப்பறைகள் தொடக்க விழா தமிழ்ப் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, 57வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்குக் கையடக்கக் கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி விழா உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அற நிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக நான் கலந்துகொள்வேன். ஆனால் என்னைவிட ஆர்வமாக கலந்து கொள்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான். தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தவுடன் நான் கலந்து கொள்ள வேண்டிய முதல் விழா இதுவாக இருக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷிடம் சொல்லி இருந்தேன். அதன்படி பள்ளி மாணவர்களைப் பார்க்கும் போது எனக்கும் இளமை திரும்புகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளவில் சவால் விடும் வகையில் வளர வேண்டும் என்பதே என் ஆசை ஆகும்.
அன்பில் மகேஷ் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை பொற்காலமாக விளங்குகிறது. அவர் பள்ளிக்கல்வித்துறையை உலகத்தரத்தில் கொண்டு செல்ல முயற்சித்து வருகிறார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்குச் சிறப்பான பாராட்டுகள் வழங்க உள்ளோம். 12 ஆம் வகுப்பில் 35 பேரும், 10 ஆம் வகுப்பில் 8 பேரும் தமிழில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அந்த மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி பாராட்ட உள்ளோம்.
புதுமைப் பெண் திட்டங்களைப் பல மாணவிகள் பாராட்டினார்கள். அந்த மகிழ்ச்சி மாணவர்களுக்கும் கிடைக்கவே ‘தமிழ் புதல்வன்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும். நீட் தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளது. எனவே நீட் தேர்வுக்கு விரைவில் முடிவு கட்டுவோம். எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும் உங்களுக்காகதான் பல புதிய திட்டங்களை ஆரம்பிக்கிறோம். மத்த எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன். பதிலுக்கு நீங்க படிங்க. படிங்க படிச்சிக்கிட்டே இருங்க” எனப் பேசினார்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் மாதம்தோறும் மாணவர்களுக்கு ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.