'புரட்சிப் பயணம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, தனது ஆதரவாளர்களை நேரில் சந்தித்துப் பேசி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114- வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சசிகலா, "தகுந்த நேரம் வரும் போது அ.இ.அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். அண்ணாவின் கொள்கைகளை பேச்சளவில் பின்பற்றுவது மட்டுமின்றி, அவற்றைச் செயல்படுத்திக் காட்டியவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. அ.இ.அ.தி.மு.க. நிச்சயம் ஒன்றாக இணைந்து வெற்றி பெறும், நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். அண்ணாவின் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக இணைந்து வெற்றி பெறுவர்.
ஏழை, எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தாமல் அதனை அரசு செயல்படுத்த வேண்டும். கனிம வளங்கள் மட்டுன்றி அரசாங்கத்தில் நிறைய தவறுகள் நடக்கின்றன. அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும். புரட்சிப் பயணம் செல்லும் இடங்களில் மக்கள் கூறுவது, தி.மு.க. அரசு எதையும் செய்யாமல் வஞ்சிப்பதாகக் கூறுகின்றனர்." இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.