தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில், ‘ஒப்புதல் அளித்துக் கையெழுத்திடாத ஒரு திட்டத்திற்கு (பி.எம். ஸ்ரீ), நிதி மட்டும் வேண்டும்’ என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேட்பதாகப் பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது பொய்யான தகவல். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கையெழுத்திடாத 'பிஎம் ஸ்ரீ' திட்டத்திற்கான நிதியைக் கேட்கவில்லை, 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த நிதியையே கேட்டுள்ளார். கடந்த 2022 - 23ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த நிதியில் 2023 - 24ஆம் ஆண்டுக்கான ரூ.249 கோடி மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான முதல் தவணையான ரூ.573 கோடியும் நிலுவையில் உள்ளது.
'பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே பொய்யைப் பரப்பாதீர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.