சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட தையாகுப்பம் சாலையில் 20-க்கும் மேற்பட்ட குறவர் சமூக மக்கள் குடும்பமாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நரிக்குறவர் விஜி (34 ), அவரது தங்கை வெண்ணிலா (28 )ஆகிய இருவரும் உடல்நலக்குறைவால் காலமானார்கள். இவர்கள் இருவரின் உடலை அந்தப் பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு அப்பகுதியில் உள்ள மாற்று சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உடலைப் புதைக்க அனுமதிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடலை சாலையில் வைத்து நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், டிஎஸ்பி ரமேஷ்ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் சடலங்கள் காத்துக்கிடந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வாய்க்கால் ஓரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் இருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.'சடலத்துல சாதியை பார்த்து சுடுகாட்டில் புதைக்க மறுக்கும் இவர்கள் மனுசங்களா? மனிதநேயம் உள்ளவர்களா? நாங்க மட்டும் என்ன பாவம் செஞ்சோம்' என குறவர் சமூக மக்கள் அழுது புலம்பியது அந்தப்பகுதியில் இருந்தவர்களை கண்கலங்க செய்தது.