நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் கரோனா பரவல் என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி முதல் தொகையாக 2,000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான கோப்புகளிலும் பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
அதன்படி கரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் வழங்கப் படுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதற்கான டோக்கன்களையும் நியாய விலை கடை ஊழியர்கள் வினியோகித்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா நிவாரண நிதி உதவி ரூபாய் 2,000 ரூபாய்க்கான டோக்கன்கள் ஞாயிற்றுக்கிழமையும் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.