தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்துப் பேசி இருந்தார்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என மண்டலம் வாரியாக பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை திட்டமிட்டுள்ள விஜய், மாநாட்டிற்காக சிறப்பாக பணிகளை ஏற்று முடித்துக் காட்டியவர்களுக்கு கட்சியில் பதவி தரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை அடுத்த பனையூரில் தனது கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடக்க உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தமாக 138 நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டை மிகப்பெரிய அளவில் வெற்றி மாநாடாக நடத்தி காட்டிய நிர்வாகிகளுக்கும் அதற்காக அமைக்கப்பட்ட குழுவினர்களுக்கும் விஜய் வாழ்த்து தெரிவிக்க இருக்கிறார். மேலும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றிக் கழக கட்சி விஜய்யின் கொள்கைகளை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் சீமான் மட்டுமல்லாது ஏனைய பிற கட்சிகளும் வைத்துள்ள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களையும் விஜய் இந்த கூட்டத்தில் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.