Skip to main content

பள்ளம் ஏற்படுத்திய மர்மப் பொருள் என்ன?- மாவட்ட அறிவியல் அலுவலர் விளக்கம்

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
 What is the mysterious object that caused the crater?- District Scientific Officer explained

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ரவி என்பவருடைய நிலத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது. அதன் காரணமாக சுமார் ஐந்து அடி அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது.

இதனை அதே பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவர் பார்த்துள்ளார். ஆனால் ஏதோ சாதாரண பள்ளம் என்று நினைத்து விட்டுவிட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் திரும்பவும் அதே இடத்திற்கு சென்ற திருமலை அந்தப் பள்ளத்தைப் பார்க்கும்போது அந்தப் பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கூறுகையில், அந்தப் பள்ளத்தின் முன்பு அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். மேலும் இந்த மர்ம பொருள் என்னவென்று தெரியாமல் அச்சம் அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பள்ளத்தை நேரில் பார்வையிட்டார். மேலும் இந்தப் பள்ளத்தை முதலில் பார்த்தவர் யார்? யாருக்கு சொந்தமான இடம் எனவும் கேட்டறிந்தார்‌.

அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் முனியப்பனிடம் இந்தப் பள்ளத்தைச் சுற்றி வேலி போட்டு பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மாவட்ட அறிவியல் மைய அலுவலர்கள் நேரில் வந்து விசாரணை மேற்கொள்வார்கள். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறிச் சென்றார். மேலும்  மாவட்ட அறிவியல் மையம் அலுவலருக்கு விழுந்த மர்ம பொருள் என்னவென்று கண்டறிய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

இதன் காரணமாக சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் செயல் இயக்குநர் லெனின் தமிழ் கோவன் உத்தரவின் படி, வேலூர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் மாவட்ட அறிவியல் அலுவலர் பொறுப்பு ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து 5அடி பள்ளத்தில் இருந்து மண் மற்றும் சாம்பலின் மாதிரிகளை சேகரித்தார். அதேபோல் பள்ளத்தின் அருகே உள்ள மண் மாதிரிகளையும் சேகரித்தார். இந்த மண் மற்றும் சாம்பலின் மாதிரிகளை சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து  இந்த பகுதியில் விழுந்த மர்மப் பொருள் எரிகல் தான் விழுந்த வேகத்தில் மண் சாம்பலாக மாறி உள்ளது. இது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே சுற்றும் சிறு கோள்களாகவும் இருக்கலாம். பின்னர் பூமி நோக்கி வரும்பொழுது எரிகல்லாக மாறி இருக்கலாம் எனவும் தகவல் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்