
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்100 பெண்களுக்கு ஆடுகளை வழங்க நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன் ஆகியோர் கால்நடை மருத்துவமனைக்கு வந்தனர். நிகழ்ச்சியில் தொடங்கியதும் ஆடுகளை வாங்க வந்த மூதாட்டி ஒருவர் ஒன்றிய செயலாளர்களான சௌந்தரபாண்டியனிடமும். மணிகண்டனிடமும் 'அதிமுக ஆட்சியில் பெரிய ஆடு கொடுத்தாங்க.. நீங்க என்னப்பா குட்டியை கொடுக்குறீங்க'' என்றார்.
அதற்கு ஒன்றிய செயலாளர்களோ, ''அதிமுக காரங்க 5 பெரிய ஆடுகள கொண்டுவந்து எல்லாருக்கும் கொடுக்கிறதா சொல்லி ஒரே ஆடுகளை வைத்து தனித்தனியாக போட்டோக்கு மட்டும் போஸ் கொடுத்துட்டு பணத்தை ஆட்டைய போட்டு போயிட்டாங்க. ஆனால் இந்தத் திட்டத்தில் எல்லோருக்கும் கொடுக்கணும். அதற்காக ஆறு மாதத்தில் இருந்து 8 மாத குட்டியாக கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து வளர்க்க செய்கிறோம். இதனால் நீங்கள் மட்டுமே பயனடையப் போகிறார்கள்'' என்றார்கள். அதைக்கேட்ட மூதாட்டியும் புன்சிரிப்புடன் ஆட்டுக் குட்டியைப் பிடித்துக் கொண்டு கிளம்பினார். அதைத்தொடர்ந்து பெண்களுக்கு ஆட்டுக்குட்டிகளை வழங்கினார்கள்.