தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழையால் டெல்டா மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது. வீடுகளும், விளைநிலங்ளில் உள்ள பயிர்களும் தண்ணீரில் மிதக்கின்றன. மக்கள் வீடுகளிலேயே முடங்கியநிலையிலேயே பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வடகிழக்கு பருபவமழை வழக்கத்தைவிட கடந்த நான்கு நாட்களில் சற்று அதிகமாகவே கொட்டித்தீர்த்துள்ளது. தூர்வாரும் பணியில் அலட்சியம் காட்டியதன் விளைவு பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கிகிடக்கின்றனர். வடிகால் வசதிகள் இல்லாமல் தெருக்களில் தண்ணீர் சூழ்ந்து ஏரியாக காணப்படுகின்றன. பெரும்பாலான குடிசைகள் இடிந்து விழுகிறது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் மெலட்டூர் மூன்றாம் சேத்தியில் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் துரைக்கண்ணு என்பவர் இறந்துள்ளார். அதேபால் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரவிச்சந்திரன் என்பவர் உயிரிழந்திருக்கிறார். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் தண்ணீரில் சூழ்ந்துகாணப்படுகிறது. கூரை வீடுகளும், ஓட்டு வீடுகளும் இடிந்துவருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மழைகாலம் வந்தாலே முதலில் பாதிக்கும் இடமாக வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட விளக்குமுகம் தெரு முழுகிவிடும் அதற்கு காரணம் வடிகால் வாயக்கால்கள் முழுவதும் தனியார் விடுதிகளால் ஆக்கிரிமிக்கப்பட்டதுதான் என கூறிதொடர்ந்து அந்த பகுதிமக்கள் போராடிவருகின்றனர். அரசின் அலட்சியம் இந்த மழையிலும் அவர்கள் தப்பவில்லை.
அங்குள்ள பொதுமக்கள் கூறுகையில், "ஒவ்வொரு வருடமும் மழைகாலம் வத்துவிட்டாலே உசுரு கையில இருக்காது, யார் வீடு இடியுமோ, யார் உசுரு போகுமோன்னு ஆகிடும், எல்லா ஊரும் தண்ணீர் வடிஞ்சாலும், எங்க ஏரியா வடிய மாதக்கணக்காகிடும், நோய்பரவும், இதுக்கெல்லாம் ஒரே, ஒரு வடிகால் அதன் ஆக்கிரமிப்பை எடுத்து தூர்வாரிட்டா எங்க பேரூராட்சியே தப்பிச்சிடும், " என்கிறார்கள்.
இதேநிலமையில்தான் டெல்டா மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களின் நிலமையும் உள்ளது.