தேனி மாவட்டத்தில் உள்ள அமமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில், ''என்னை சிறைக்கு செல்வேன் என்று சிலர் கூறினார்கள். இன்று யார் சிறைக்குச் செல்லப்போவது என்பது உங்களுக்கே தெரியும். தற்போதுள்ள அதிமுக பிஸ்னஸ் கட்சிபோல் உள்ளது. அதனால்தான் அன்றே தனிக்கட்சி துவங்கினேன். அதிமுகவில் பதவிக்காக சண்டைவரும் என்று அன்றே கூறினேன். அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை விரைவில் பெறப் போகிறார்கள்.
பாராளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரக்கூடும் அதற்கான பணிகளை தற்போது இருந்தே துவங்குங்கள். குக்கர் சின்னத்தை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். வருங்கால தேர்தலில் பணம் வேலை செய்யாது. உள்ளாட்சி தேர்தலில் நமது பங்காளிகள் (அதிமுக) பணம் கொடுத்தும் வெற்றி பெற முடியவில்லை. அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். வரும் 15ஆம் தேதி நமது கட்சியின் பொதுக்குழு சென்னையில் நடைபெறும்'' என்று கூறினார்.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிடிவி, ''ஓபிஎஸ் ஆதரவாளர் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் எனது நீண்ட நாள் நண்பர். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதில் அரசியல் ஏதும் இல்லை'' என்றார். ஓபிஎஸ் ஆதரவு கேட்டால் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு ''உங்கள் யூகத்துக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இது ஒரு தனி இயக்கம்'' என்றார்.