Skip to main content

மறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள்! -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

‘திருடனுக்குத் தேள் கொட்டியது போல..’ எனச் சொல்வதுண்டு. அதுபோன்ற  ஒரு சம்பவம், விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் – ஏழாயிரம்பண்ணை போலீஸ் லிமிட்டில் நடந்திருகிறது. இருவர் உயிரிழந்த இந்த விவகாரத்தில், தன் கடமையைச் செய்வதற்கே திண்டாடித் திணறுகிறது காவல்துறை. 
 

dsp

 

 

20-ஆம் தேதி, சாத்தூர் – விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த பிள்ளையாரும், அவருடைய மகன் மாரியப்பனும் கோட்டைப்பட்டி – வைப்பாற்று பகுதியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதற்கு மாட்டு வண்டியில் சென்றனர். இன்னும் ஆழமாகத் தோண்டினால் தரமான மணல் கிடைக்குமென்று பள்ளத்தில் அள்ளியபடியே இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்ததில் இருவரும் புதைந்தனர். அங்கிருந்தவர்கள் மணலை விலக்கி இருவரையும் சிவகாசியிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனை,  இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூற, உறவினர்கள் சத்தமில்லாமல் தூக்கிவந்து விஜயகரிசல்குளம் மயானத்தில் உடல்களை எரித்துவிட்டனர். 

மணல் திருட்டிலிருந்து வைப்பாற்றில் நடக்கின்ற அத்தனை சமூக விரோதச் செயல்களும் காவல்துறைக்குத் தெரிந்தே மாமூலாக நடந்துவருகின்றன.  இந்த இரு உயிரிழப்புகளும் காவல்துறையில் ஒரு சிலருக்குத் தெரிந்தே நடந்திருக்கின்றன. விஷயம் வெளியில் லீக் ஆகாது என்ற நம்பிக்கையுடன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆனால், மீடியாக்களின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றவுடன், சம்பவம் நடந்த ஏழாயிரம்பண்ணை லிமிட்டில் வழக்கு பதிவு செய்வதா? உடல்களை எரித்த வெம்பக்கோட்டை லிமிட்டில் பதிவு செய்வதா? என்று சீரியஸாக ஆலோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர். 

நாம் ஏழாயிரம்பண்ணை காவல்நிலையத்தை தொடர்புகொண்டோம். “முதலில் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதனால், வழக்கு பதிவு செய்யவில்லை. தற்போது வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் வந்திருக்கிறது.  இதுகுறித்துப் பேசுவதற்காக  சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி சாத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். அவர் வந்தபிறகுதான் விவரம் சொல்ல முடியும்.” என்றனர்.  

சாத்தூர் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணனை தொடர்புகொண்டோம். அந்த லைனில் “என்ன விவரம்?” என்று கேட்க,  ‘மணல் திருட்டும் உயிரிழப்புகளும் திட்டமிட்டே காவல்துறையால் மறைக்கப்பட்டிருக்கிறது..’ என்று நடந்ததை நாம் விவரிக்க.. அனைத்தையும் கேட்டுவிட்டு  “நான் டி.எஸ்.பி. இல்லை அவருடைய டிரைவர்.” என்றது அந்தக்குரல். ’சரி.. டி.எஸ்.பி.யிடம் பேச வேண்டியதிருக்கிறது. அவரிடம் விபரத்தைச் சொல்லுங்க.’ என்றோம். ஆனால். டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் அடுத்து நம் லைனுக்கு வரவே இல்லை. 

அனுமதியின்றி மணல் அள்ளியபோது புதைந்து இருவர் மாண்ட விவகாரத்தை மறைத்துவிடத் துடிக்கிறதே காவல்துறை! மணல் திருட்டுக்குத் துணைபோகும் காவல்துறையின் கடமை உணர்வை என்னவென்று சொல்வது?

 

 

சார்ந்த செய்திகள்