
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் 17 வயது மாணவி, பெற்றோர் இறந்துவிட்டதால் பெரியம்மா பராமரிப்பில் வெளியூரில் தங்கி படித்துவருகிறார். சில தினங்களுக்கு முன்பு திடீரென இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரது பெரியம்மா சிகிச்சைக்காக சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு சிறுமியின் பெரியம்மாவும் சிறுமியும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப் - இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உள்ளிட்ட போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அவர்களது விசாரணையில் “கடந்த மே மாதம் 3ஆம் தேதி உறவினர் வீட்டுக்குச் சிறுமி விருந்தினராக சென்று தங்கியிருந்தபோது அதிகாலை நேரம் இயற்கை உபாதையை கழிப்பதற்காக எழுந்தேன்.
அப்போது மர்ம நபர் ஒருவர் என் வாயை மூடி, என்னை மயக்கமடைய செய்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்று எதுவுமே புரியவில்லை” என்று சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து சிறுமியை வன்புணர்வு செய்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். தனக்கு என்ன நேர்ந்தது என்ற உணர்வே இல்லாத அப்பாவி சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த அந்த மர்ம மனிதனை மகளிர் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.