
தலைமறைவாக உள்ள எஸ்.வி.சேகரை தமிழக காவல்துறையினர் தேடிவருவதாக கூறப்படும் நிலையில், அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பேரனின் பிறந்தநாளுக்கு பத்திரிக்கை கொடுத்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்தை சமூகவலைதளத்தில் பதிவு செய்த பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர், பின்னர் அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் அதனை நீக்கிவிட்டார். இந்நிலையில் அவரது கருத்துகள் பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பத்திரிகையாளர் சங்கங்கள் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தன. இதனால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என அஞ்சிய அவர் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்சநீதிமன்றமும் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. மேலும் அவரை கைது செய்ய எவ்வீத தடையும் இல்லை என்றும் கூறியது.

இந்தநிலையில், சென்னையில் எஸ்.வி.சேகரின் பேரனுக்கு நாளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளதாகவும், இதற்காக அவரது வீட்டில் பெரிய அளவில் தயாரிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதற்கான வேலைகளில் நேற்றில் இருந்து தீவிரமாக ஈடுபட்டு வரும் எஸ்.வி.சேகர் சில முக்கிய பாஜக பிரபலங்கள், சில ஆளும் கட்சி பிரபலங்கள், சினிமா நண்பர்கள், உள்ளிட்டோருக்கு இதற்காக பத்திரிக்கை கொடுத்து வருகிறார்.
பொதுமக்களிடம் தனக்கு கடும் எதிர்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட அவர், உயர்அதிகாரியான உறவினரின் செல்வாக்கை பயன்படுத்தி துப்பாக்கி ஏந்திய போலீசாரை அழைத்து கொண்டு மிக சாதாரணமாக சுற்றி வருகிறார். நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு அவர் நிதானாமாக சென்றுள்ளார். அப்போது சுற்றி இருந்தவர்கள் அவரை மறைந்து இருந்து போட்டோ எடுக்க அவரோ, போட்டோ தானே.. தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறி போஸ் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த ஒரு சிலர் அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். பின்னர் உணவகத்தில் இருந்து கிளம்பிய அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் இன்னோவா கார் கதவை திறந்து விட காரில் ஏறி கூலாக செல்கிறார்.