தமிழ் மொழி மீது இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் சொல்லியிருப்பது நமக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''தமிழகத்தில் மட்டும் சமத்துவம், சமூகநீதி இருப்பதைவிட இந்தியா முழுமைக்கும் சமூகநீதி பரப்பப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து ஒரு சமூகநீதி மாநாட்டை இந்திய அளவில் நம்முடைய தமிழக முதல்வர் நடத்தியுள்ளார். எனவே திமுகவை பொறுத்தவரை அம்பேத்கருக்கும் விழா எடுக்கிறோம் என்று சொன்னால் அது கொள்கை ரீதியாக எடுக்கின்ற விழா. அவருடைய கொள்கையை இளைஞர்களுக்கும் மற்றும் வளர்ந்து வருபவர்களுக்கும் எடுத்துச் சொல்வதற்காக நடக்கின்ற விழா.
தமிழக முதல்வர் நடத்துவது ஏதோ ஒரு அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. சமுதாய சீர்திருத்தத்திற்காக. சமூக நோக்கத்தோடு பாடுபட்ட அம்பேத்கர், அவரோடு ஒன்றிணைந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களை நாம் கொண்டாடுகிறோம் என்று சொன்னால் அவர்கள் சமூக நீதிக்காக இந்த சமுதாயத்தில் ஆண் பெண் வேறுபாடு இன்றி, ஜாதிய வேறுபாடு இன்றி, மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக பாடுபட்டார்கள். அதற்காகத்தான் அம்பேத்கர் பிறந்தநாளை தமிழக முதல்வர் சமத்துவ நாளாக குறிப்பிட்டு இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.
அப்போது செய்தியாளர்கள் 'தமிழ் மொழி மீது இந்தி மொழியை திணிக்க முடியாது என ஆளுநர் கூறியுள்ளாரே' என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ''இன்று மாநில ஆளுநர் தமிழக மக்களின் உணர்வுகளை எல்லாம் புரிந்துகொண்டு, தமிழக அரசினுடைய எண்ணங்களையும் தெரிந்துகொண்டு இப்படி அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. உண்மையையே அவர் சொல்லியிருக்கிறார். இந்தி மொழி மிகவும் பிற்பட்டது தமிழ் மொழிதான் கலாச்சாரத்தில் மிகவும் பழமை வாய்ந்த மொழி என்றெல்லாம் அவர் அறிவித்திருக்கிறார். உண்மையிலேயே கொஞ்சம் கொஞ்சமாக தமிழினுடைய வரலாற்றைத் தெரிந்து கொண்டிருக்கிறார் என்பது நமக்கு புரிகிறது. ஆகவே முழுமையாக தமிழுடைய வரலாற்றை அவர் தெரிந்துகொண்டு வரும் காலங்களில் உண்மையிலேயே முதல்வருடைய குரலுக்கு செவி சாய்த்து நடப்பார் என்று நம்புகிறோம். தமிழ் மொழி மீது இந்தி திணிக்கப்படாது என்று ஆளுநர் சொல்லியிருப்பது நமக்கு கிடைத்த வெற்றி'' என்றார்.