மயிலாடுதுறை பகுதிகளில் மணல் கொள்ளை விதவிதமாக நடந்து வருகிறது. அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தெரிந்தே நடப்பது தான் வேதனை.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஆரம்பத்தில் 4 தனியார் மணல்குவாரிகள் செயல்பட்டு வந்தன. பிறகு அரசாங்கமே அந்த குவாரிகளை நடத்தி வந்தது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை என பல்வேறு மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் மணல் கொண்டு சென்றனர். தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் மணல் அள்ளுவதனால் தண்ணீர் பிரச்சனை தலைவிரிக்கத் துவங்கியது. பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர்.
அதன் எதிரொலியாகவும், நீதிமன்றங்களின் அதிரடி உத்தரவினாலும் குவாரியை அரசு சில காலம் நிறுத்தியுள்ளது. அந்த குவாரிகளை மீண்டும் திறக்க பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் அதிமுக அமைச்சர்களும் எம்.எல்.ஏ க்களும், அதிகாரிகளும். இந்த நிலையில் மணல் தட்டுப்பாட்டை சாதகமாக்கிக் கொண்ட மணல் கொள்ளையர்கள் விதவிதமான முறையில் மணல் கொள்ளையடித்து வருகின்றனர்.
மணல் கடத்தல் குறித்து கொள்ளிடகரையோரம் உள்ள சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "ஆரம்பத்தில் மணல் குவாரிகளை தனியார் மூலம் நடத்தினார்கள். பிறகு அரசாங்கமே அந்த கொள்ளையில் ஈடுபட்டது. நீதி மன்றத்தின் உத்தரவினால் நிறுத்தினார்கள். அதனால் மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளிடம், தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர், சுவாமிமலை, திருப்பனந்தாள், கபிஸ்தலம், உள்ளிட்ட பத்து காவல் நிலையத்தில் உள்ள காக்கிகளுக்கு வறுமானம் குறைந்தது. அதை ஈடு செய்ய பல்வேறு நூதன முறையில் மணல் கொள்ளை நடத்த அனுமதிக்கிறார்கள்.
அந்த வகையில் குட்டி யானை, மாருதி வேன், ஆட்டோ, டூவிலர், டிராக்டர்கள், மாட்டு வண்டி, என பல வகையிலும் மணல் அள்ளி சென்று விற்கிறார்கள். ஒரு டாட்டா ஏஸ் மணல் 3000 ரூபாய் அதில் 1000 ரூபாயை சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு கொடுத்துவிட வேண்டும், ஒரு மாட்டு வண்டி மணலின் விலை 4000 ரூபாய் அதில் 1500 ரூபாய போலீஸ்க்கு கொடுத்திடனும், ஒரு சாக்கு மூட்டை மணலின் விலை 100 ரூபாய் ஒரு டூவிலரில் 6 மணல் மூட்டைகளை கடத்தி செல்கிறார்கள். ஒரு இரவில் மட்டும் 15 நடை அடித்து விடுவார்கள். அதில் ஒரு சாக்கு மூட்டை மணலுக்கு 30 ரூபாயை கணக்கிட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலைய காக்கிகளுக்கு கொடுத்து விடுகின்றனர்.‘அதிமுக ஆட்சியில் கொள்ளையர்களுக்கு பஞ்சம் இருக்குமா என்ன’ என்று வேதனையை வெளிப்படுத்தினார்.