கடந்த 27/2/2021 அன்று மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அதேபோல் சட்டபஞ்சயாத்து இயக்கமும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், ''முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவராக டாக்டர் மகேந்திரனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அதேபோல் இவரையும் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். கலாம் என்ற பெயரைத் திருப்பிப்போட்டால் கிட்டத்தட்ட என் பெயரும் வரும்'' என்றார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பொன்ராஜ் பேசுகையில், “அப்துல் கலாம் பெயரில் கட்சியைப் பதிவு செய்யவிடாமல் இன்றுவரை பாஜக தடுத்து வருகிறது. கலாமின் அறிவார்ந்த அரசியல், காலத்தின் கட்டாயம். அவர் கனவை நனவாக்க தொடர்ந்து உழைப்பேன். கடந்த மூன்று ஆண்டுகாலமாக ரஜினிகாந்துடன் இணைந்து அறிவார்ந்த தமிழகத்தை உருவாக்க, கொள்கை உருவாக்கத்தில் பணியாற்றினேன். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவர் அரசியலுக்கு வரமுடியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார். 'கலாம் வீட்டில் இருந்துதான் நான் கட்சியே ஆரம்பித்தேன். எனவே நீங்கள் வர வேண்டும்’ என அழைப்புவிடுத்தார்.
ஒருமுறை கொச்சியில் இருந்து சென்னை வரும் விமானத்தில் ஒரே நேரத்தில் கமலும் கலாமும் பயணம் செய்தபோது, அந்த இடத்தில் பக்கத்தில் இருந்த நான் அவரை கலாம் அருகே அமரவைத்தேன். அதன்பின் இருவரும் சென்னை வரும் வரை பேசிக்கொண்டே வந்தார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் எனத் தெரியவில்லை. பின்பு கலாமிடம் கேட்டேன். கமலை அரசியலுக்கு வரச் சொன்னதாக சொன்னார். எனக்கு இருக்கும் அரசியல் அறிவுப்படி, நான் போட்ட கணக்கின்படி பார்த்தால், 120 இடங்களை மக்கள் நீதி மய்யம் வெல்லும்'' என்றார்.