நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் வழக்கை சிபிசிஐடியினர் விசாரணை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பதியில் கைது செய்யப்பட்ட உதித்சூர்யா அவரின் தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரையும் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்தனர்.
இந்தவிசாரணையின் போது சிபிசிஐடி தென்மண்டல கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஜெகதீஷ் குமார், தேனி சிபிசிஐடி ஆய்வாளர் சித்ராதேவி ஆகியோர் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தனர். பின்னர் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருவரையும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன்பின் தேனி அருகே உள்ள புதுப்பட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பன்னீர்செல்வம் முன் ஆஜர்படுத்தினர். அதனடிப்படையில் நீதியரசரும் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் கண்டமனூர் அருகே உள்ள தேக்கம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட சிறைச்சாலைக்கு உதித்சூர்யாவையும், அவரின் தந்தை வெங்கடேசனையும் கொண்டு சென்றனர். அப்பொழுது அங்குள்ள சிறைத்துறை அதிகாரிகளிடம் பேசிய போலீசார் திடீரென இருவரையும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுசம்பந்தமாக போலீஸார் சிலரிடம் கேட்டபோது, கண்டமனூர் அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் உதித்சூர்யாவையும், அவரின் தந்தையையும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் பத்து மணிக்கு முன்பாகவே சிறைச்சாலைக்கு சென்றுவிட்டனர். இருந்தபோதும் நீட் ஆள்மாறாட்ட வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பெரிய வழக்காக மாறிவிட்டது. அதன்மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால் மதுரை மத்திய சிறையில் அடைத்தான் சரியாக இருக்கு என தேனி சிறைச்சாலை சூப்பிரண்டு கூறிவிட்டார். உடனே இத்தகவல்களை மேலிடத்திற்கு பேசி அதற்கான அனுமதி பெறப்பட்டது. அதன் பிறகுதான் மதுரையிலுள்ள மத்திய சிறைக்கு உதித்சூர்யாவையும், அவருடைய தந்தை வெங்கடேஷையும் இரவோடு இரவாக கொண்டு சென்று அடைத்தோம் என்று கூறினார்கள்.