அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. மேலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ''ராகுல் காந்தி தகுதி நீக்கம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப்பை மோடி அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதில் தேதிகளை எல்லாம் கோர்வையாக பார்க்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ராகுல் காந்தி கர்நாடகாவில் கோலாரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அந்த தேர்தல் கூட்டம் முடிந்த பிறகு நிருபர்கள் கேள்வி கேட்கிறார்கள். பேசும்பொழுது ஒரு வாசகத்தை சொல்கிறார். இது நடந்தது கர்நாடக மாநிலம் கோலார்.
மூன்று நாட்கள் கழித்து ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி குர்னேஷ் மோடி என்பவர் குஜராத் மாநிலத்தில் சூரத்தில் வழக்கு தொடுக்கிறார். கோலாருக்கும் சூரத்திற்கும் என்ன சம்பந்தம். பேசியது கர்நாடக மாநிலம் கோலாரில், வழக்கு தொடர்ந்தது குஜராத் சூரத்தில். 2019 ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்த வழக்கு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள், மூன்றாண்டுகள் கிடப்பில் இருந்தது. அந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் தண்டனை வாங்கித் தரணும் என்றெல்லாம் புகார்தாரர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2022 மார்ச் மாதத்தில் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்ற குர்னேஷ் மோடி என்னுடைய வழக்கை விசாரிக்கக் கூடாது என்று அவரே கேட்கிறார். சாதாரணமாக வாதி பிரதிவாதி என்ற நிலையில் வாதியின் வழக்கை விசாரிக்கக் கூடாது என பிரதிவாதி கேட்பார். ஆனால் வாதியே என்னுடைய வழக்கை விசாரிக்கக் கூடாது என்று கேட்கிறார்.
குஜராத்தில் உயர்நீதிமன்றம் அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கிறது. தடை 2022 மார்ச்சில் இருந்து 2023 பிப்ரவரி வரை இருக்கிறது. இந்த வழக்கில் நீதிபதி மாற்றப்பட்டு புதிய நீதிபதி வருகிறார். 2021 பிப்ரவரி 7 ஆம் தேதி ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துப் பேசும் பொழுது கடுமையான குற்றச்சாட்டுகளை பிரதமர் மீதும் ஒரு நிறுவனத்தின் மீதும் ஆதாரத்துடன் வைக்கிறார். இது நடந்த ஒன்பது நாட்களில் வாதி நீதிமன்றத்திற்குச் சென்று என்னுடைய வழக்கின் விசாரணைக்கு கொடுக்கப்பட்டிருந்த தடையை நீக்கி விடுங்கள் விசாரணை துவங்குங்கள் என்று சொல்லி இருக்கிறார். மூன்று ஆண்டுகள் கிடப்பிலிருந்த வழக்கு 30 நாட்களில் விசாரித்துத் தீர்ப்பளித்து தண்டனை விதித்து மறுநாள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.'' என்றார்.