Skip to main content

டெங்கு காய்ச்சலை தடுக்க வழிமுறைகள் என்ன?

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

What are the measures to prevent dengue fever?

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. பகல் நேரங்களில் கடிக்கக்கூடிய ஏ.டி.எஸ். எஜிப்டி வகையான கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவும். இந்தக் காய்ச்சலால் உயிர் பிரியும் ஆபத்தும் உள்ளது. புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் கல்லூரி மாணவி ஒருவரும், இளம் பெண் ஒருவரும் பலியாகினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டையில் இன்று பலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு உறுதியாகி அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சில வழிமுறைகள் உள்ளன. அதை செய்தால், நாம் இது போன்ற கொடிய காய்ச்சலில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும்.

 

இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் சாதாரண காய்ச்சலுடன் இருக்கும். நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சராசரியாக 3 முதல் 14 நாள்கள் பிடிக்கும். குழந்தைகளுக்கு சாதாரணமாக தோன்றும் ஜலதோஷம், வாந்தி, வயிற்றுப்போக்குடன் அறிகுறிகள் தொடங்கும். பெரியவர்களுடைய அறிகுறியை விட குறைவாக குழந்தைகளுக்கு தோன்றும் நோய் தாக்கம் அதிபயங்கர தாக்குதலுக்கு உண்டாக்கும்.

 

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவான ஏ.டி.எஸ் வகை கொசுவை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த சில வழிமுறைகள் செய்ய வேண்டும். அதில், வீட்டில் உள்ள பழைய டயர், தூக்கி வீசி எறியப்பட்ட பூச்சாடி, பிளாஸ்டிக் பைகள், கேன்களில் தண்ணீர் சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இது போன்ற தேவையற்ற பொருட்களை அகற்றிவிட வேண்டியது மிகவும் நல்லது.

 

மேலும், உபயோகப்படுத்தாத கழிவறைகளில், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு உண்டு. அதனால், அது போன்ற கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், வீட்டில் அன்றாடம் நாம் உபயோகப்படுத்தும், தண்ணீர் பாத்திரங்களை நன்றாக மூடி, கொசு அண்டவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும், நீர்த்தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீட்டில் ஏசி, குளிர்சாதனப்பெட்டி மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்காமல் அவ்வப்போது நீக்கி விடவேண்டும். ஏனென்றால், இது போன்ற தண்ணீர் தேங்கும் தொட்டிகளில் இந்த வகையான கொசு தனது இனப்பெருக்கத்தை செய்து பரவும் அபாயம் உள்ளது.

 

கொசு கடிக்காமல் இருக்க கை கால்களை மறைக்கும் உடைகளை அணியவேண்டும்.  வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து பார்த்து கொள்ள வேண்டும். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகப்படுத்தலாம். இந்த கொசு பகல் நேரத்தில் அதிகம். குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும். அதனால், அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது, கொசுவை ஒழிக்க ஏதுவாக இருக்கும்.

 

மேலும், நீர் சேர்ந்து இருக்கும் இடங்களில், கொசுவின் லார்வாவை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம் கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம். கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலமுமே டெங்கு காய்ச்சலை தடுக்க, ஒழிக்க முடியும்.

 

 

சார்ந்த செய்திகள்