Skip to main content

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

What are the additional relaxations in Tamil Nadu?

 

கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் இருந்து மேலும் கூடுதல் தளர்வுகளை அறிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23/10/2021) உத்தரவிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15/11/2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. 

 

பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பொருட்கள் வாங்குவதற்காகக் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அனைத்து வகைக்கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11.00 மணி வரை மட்டும் செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடுகள் இன்று (23/10/2021) முதல் தளர்த்தப்படுகிறது. 

 

அதேபோன்று, அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சைத் தேவைகளுக்காக நீச்சல் குளங்களைப் பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. 

 

அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8 ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். 

 

திரையரங்குகள் நூறு சதவிகிதம் பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 

 

கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. 

 

ஏற்கனவே, அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும், செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 

 

மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பொது பேருந்து போக்குவரத்து, நூறு சதவிகிதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். 

 

அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD, பவானி சாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையங்கள்/ மையங்கள் நூறு சதவிகிதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 

 

தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் மற்றும் கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 

 

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். 

 

திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும். 

 

முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிச் செலுத்திக் கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க உதவிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

 

புதிய தளர்வுகள் அனைத்தும் வரும் நவம்பர் 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்