விருத்தாசலம் அருகேயுள்ள திட்டக்குடி அடுத்த 'வெலிங்டன்' நீர்த்தேக்கத்தில் 13 அடியாக இருந்த தண்ணீர் தற்போது 18 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வெலிங்டன் நீர்த்தேக்கத்தைத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கணேசன், "வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கையாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தி வருகின்றது. மிகத் தாழ்வான பகுதியில் நிற்கும் தண்ணீர்களை உள்ளாட்சித் துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறக் கூடிய, நூறாண்டு பழமையான இந்த 'வெலிங்டன்' நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்து இந்த ஏரியைத் தூர்வாரி கரையைப் பலப்படுத்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைகிற வகையில் ஏரியைப் புனரமைப்பதற்கு உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாகக் கூட்டுக் குடிநீர் திட்டத்தை 1989 ஆண்டு தமிழ் நாட்டிலேயே முதல் முதலில் செஞ்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் திட்டக்குடியில் தான் துவக்கப்பட்டது. ஆகையால் ஆங்காங்கே சேதமடைந்த பைப்புகளை உடனடியாக சரி செய்யப்படும்" என்றார்.
மேலும் அவர், "அரசு சுகாதார அலுவலகத்தை மாவட்ட ஆட்சியரும் நானும் பார்வையிட்டோம். அங்கெல்லாம் என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அதெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கூறி உடனடியாக நிறைவேற்றப்படும்" எனவும் தெரிவித்தார்.